மத்திய அரசு சார்பில் திரையுலகினரை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டன.
அதில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது ‘பார்க்கிங்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்த ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ராமா ராஜேந்திரா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிபெற்ற இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளை அள்ளியது.

இப்படத்திற்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருதும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த தமிழ்த் திரைப்படம் என 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டது.
இதுதவிர சிறந்த நடிகருக்கான விருதை அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கானும், 12th பெயில் படத்திற்காக விக்ராந்த் மேஸி ஆகியோர் பெற்றுள்ளனர்.
சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘உள்ளொழுக்கு’ படத்தில் நடித்த ஊர்வசி வென்றுள்ளார். அப்படம் சிறந்த மலையாள திரைப்படம் என்ற விருதையும் வென்றுள்ளது. அதேபோன்று சிறந்த தெலுங்கு திரைப்படமாக பால கிருஷ்ணா நடிப்பில் உருவான மாஸ் கமர்ஷியல் படமான ‘பஹவந்த் கேசரி’ வென்றுள்ளது பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.