கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தமிழ் டிவி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகவை பூர்வீகமாக கொண்ட நந்தினி, பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள விடுதி ஒன்றில் Paying Guest ஆக தங்கி இருந்தார். அவர் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ’கெளரி’ நெடுந்தொடரில் இரட்டை வேடத்தில் நடித்தவர் நந்தினி.
நந்தினி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்திய கெங்கேரி போலீசார் BNSS-2023-ன் 194-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், நந்தினி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம். அவரது அறையில் இருந்து டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.
கர்நாடகாவின் விஜயநகர் மாவட்டம் கொட்டூரைச் சேர்ந்தவர் நந்தினி. இவரது தந்தை மகாபலேஸ்வரா அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து காலமானார். அவரது தாயார் பசவராஜேஸ்வரியும் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
