மத்திய ஆசியாவில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு ஒரு முக்கிய தளமாக விளங்கிய தஜிகிஸ்தானில் உள்ள அயினி விமானப்படை தளத்தில் இருந்து இந்தியா தனது செயல்பாடுகளை முழுமையாக முடித்துக் கொண்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக நீடித்த இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை, இருதரப்பு ஒப்பந்தம் காலாவதியானதாலும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட புவிசார் அரசியல் மாற்றங்களாலும், ரஷ்யா மற்றும் சீனாவின் அழுத்தங்களாலும் முடிவுக்கு வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டிலேயே இந்தியப் படைகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக திரும்பப் பெறப்பட்ட நிலையில், இதற்கான காரணங்கள் தற்போது பரவலாக வெளிவந்துள்ளன.
இந்தியாவின் நீண்டகால முதலீடும் மூலோபாய முக்கியத்துவமும்:
கிஸ்ஸார் ராணுவ விமான தளம் (GMA) என்றும் அழைக்கப்படும் அயினி விமானப்படை தளம், சோவியத் காலத்தியதாகும். 2002 ஆம் ஆண்டு முதல் இந்தியா தஜிகிஸ்தான் அரசுடன் இணைந்து இந்த தளத்தை மேம்படுத்தி இயக்கி வந்தது. மத்திய ஆசியாவில் இந்தியாவின் ஒரே மற்றும் மிக முக்கியமான வெளிநாட்டு ராணுவ வசதியாக இது கருதப்பட்டது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் நிதியுதவியுடன், சுமார் $70 முதல் $100 மில்லியன் வரை முதலீடு செய்யப்பட்டு, இத்தளம் நவீனமயமாக்கப்பட்டது. ஓடுபாதையை 3,200 மீட்டராக நீட்டிப்பது, பழுதுபார்க்கும் வசதிகள், எரிபொருள் கிடங்குகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளிட்ட பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் தளம் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிட்ட வடக்கு கூட்டணிக்கு (Northern Alliance) ஆதரவளிப்பதிலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டு வரம்பை வழங்குவதிலும், மத்திய ஆசியாவில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியப் பங்காற்றியது. இந்திய விமானப்படை இங்கு சு-30எம்கேஐ (Su-30MKI) போர் விமானங்கள் மற்றும் Mi-17 ஹெலிகாப்டர்களை தற்காலிகமாக நிலைநிறுத்தியிருந்தது. 2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியபோது, இந்திய குடிமக்களையும் அதிகாரிகளையும் வெளியேற்றும் பணிகளுக்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அயினி விமான தளத்தை மேம்படுத்துவதற்கும், கூட்டாக இயக்குவதற்குமான இந்தியாவிற்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2021-2022 காலகட்டத்தில் காலாவதியானது. இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப் போவதில்லை என்று தஜிகிஸ்தான் 2021 ஆம் ஆண்டிலேயே இந்தியாவுக்குத் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறி- தலிபான்கள் முழுமையாகக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாலும் இந்த தளத்தின் தேவை இந்தியாவுக்குக் குறைந்தது.
தஜிகிஸ்தான் தனது குத்தகை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க மறுத்ததற்கு ரஷ்யா மற்றும் சீனாவின் அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இவ்விரு நாடுகளும் மத்திய ஆசியாவைத் தங்கள் செல்வாக்கு மண்டலமாகக் கருதுவதால், “பிராந்தியத்தில் அல்லாத” ஒரு நாட்டின் ராணுவ இருப்பை விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா வெளியேறிய பிறகு, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யப் படைகள் அயினி விமானப்படை தளத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அயினி தளத்தில் இருந்து இந்தியா வெளியேறியது, மத்திய ஆசியக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகவும், இந்தியாவின் பிராந்திய ராணுவ செல்வாக்கிற்கான வரம்புகளையும் எடுத்துக்காட்டுகிறது. இது மத்திய ஆசியாவில் சீனா மற்றும் ரஷ்யாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
