காரைக்குடியில் நடந்த பாராட்டு விழாவில், கலைஞர் எனக்கு இசைஞானி என பட்டம் கொடுத்தார். அதே போல பாராட்டு விழாவை இப்போது கலைஞரின் புதல்வர் ஸ்டாலின், எனக்கு அரசு சார்பில் நடத்துகின்றார். இசை உலக சரித்திரத்தில் இதை பெரிய விசயமாக கருதுகின்றேன். என்னால் இன்னும் நம்ம முடியவில்லை என இசைஞானி இளையராஜா தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று (செப்டம்பர் 13) சென்னையில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இளையராஜா, “இதுவரை தோன்றிய கம்போசர்கள், இசையமைப்பாளர்கள், இந்தியாவில் தோன்றிய இசை அமைப்பாளர்கள் உலகம் முழுவதும் இசை மாமேதைகள் யாருக்கும் ஒரு அரசு பாராட்டு விழா நடத்தியது இல்லை .
இசை உலக சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாராட்டு விழா நடத்துவது தமிழக அரசுதான்.
கலைஞர் பெயர் கொடுத்தார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நான் சிம்பொனிக்கு போகிறேன் என்ற போது முதல் நாளே வீட்டுக்கு வந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். அதேபோல் லண்டனில் இசை கச்சேரி முடித்துவிட்டு திரும்பும் பொழுது, அரசு மரியாதை உடன் வரவேற்க முடிவு செய்து இருக்கின்றனர் என்று தகவல் வந்தது. இங்கு வந்து பார்த்தால் அமைச்சர் தங்கம் தென்னரசு கையில் மலர் கொத்துடன் காத்திருக்கிறார்கள் . மரியாதையுடன் வழி அனுப்பி வைத்துவிட்டு, வரவேற்கவும் செய்து விட்டு இன்று பாராட்டு விழா நடத்துகின்றனர். என்னால் இதை நம்பவே முடியவில்லை.
என் மேல் அவ்வளவு அன்பு வைப்பதற்கு என்ன காரணம்? இந்த இசை தானா? அவர் அப்பா வைத்த அன்பு, இசைஞானி என பெயர் வைத்தது. அதுவே என் பெயராகிவிட்டது. காரைக்குடியில் நடந்த பாராட்டு விழாவில், கலைஞர் எனக்கு இசைஞானி என பட்டம் கொடுத்தார். அதே போல பாராட்டு விழாவை இப்போது கலைஞரின் புதல்வர் ஸ்டாலின், எனக்கு அரசு சார்பில் நடத்துகின்றார். அரசு சார்பில் இசை கலைஞனுக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை. இசை உலக சரித்திரத்தில் இதை பெரிய விசயமாக கருதுகின்றேன். என்னால் இன்னும் நம்ம முடியவில்லை. என்ன பேசுவது என்பதும் மறந்து போய் விட்டது
சிம்பொனி இசையை கேட்டீர்கள். உங்களுக்கு என்ன தோன்றியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. இந்த மாதிரி ஒரு இசையை, அவ்வளவு வாத்தியங்களும் வாசிக்கும் இசை என் கற்பனையில்தோன்றி , அந்த கற்பனையை எழுத்து மூலமாக எழுதி,அத்தனை பேரும் ஓரே நேரத்தில் வாசித்து கொண்டு இருக்கின்றார்கள், ஒவ்வொருவருக்கும் எழுதிய நோட்ஸ் தான் வாசித்தார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.
குழந்தைகளுக்காக நேரம் செலவழிக்கவில்லை
எண்ணத்தில் தோன்றிய கற்பனையை வரி வடிவமாக எழுதி, 87 பேருக்கும் தனித்தனியாக எழுதி அதை ஒரே நேரத்தில் வாசித்ததுதான் சிம்பொனி. இந்த சிம்பொனியை நான் எழுதுவதற்கு இசையிலே என் வாழ்க்கை முழுவதும் சென்றது. என் குழந்தைகளுக்காக நான் நேரம் செலவழிக்க வில்லை. என்னுடைய குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்து இருந்தால் இந்த சிம்பொனியை எழுதி இருக்க முடியாது. இது போல நீங்கள் விரும்பி கேட்கும் அத்தனை பாடல்களையும் நான் கம்போஸ் செய்து இருக்க முடியாது. அதனால் நான் இங்கே நன்றி தெரிவிக்க வேண்டியது என்னுடைய குழந்தைகளுக்குதான். என்னை பொறுத்துக்கொண்டு கார்த்திக் ராஜா, யுவன் இருந்தனர். உங்களுடன் செலவழிக்க வேண்டிய நேரம்தான் இங்கு சிம்பொனியாக வந்து இருக்கின்றது. இதை நினைத்து நீங்கள் சந்தோசப்படலாம்.
என்னுடன் நேரம் செலவழிக்கவில்லை என இனி நீங்கள் கம்ளெயிண்ட் சொல்ல போவதில்லலை. உங்களுக்கும் வயச்சாயிடுச்சு
இந்த இசை எழுதும் போது எனக்கு இருந்த கட்டுப்பாடுகள், இக்கட்டாட்டான நிலை என்னவென்றால், கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் கிராமிய இசை சாயல் வந்து விடக்கூடாது , திடைப்படங்களில் எவ்வளவோ இசை அமைத்து இருக்கின்றேன் அந்த சாயல் வந்துவிடக்கூடாது, திரைப்படங்களில் வருகின்ற பின்னணி இசை சாயல் வந்து விடக்கூடாது, தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்ற அடையாளமும் வந்து விடக்கூடாது, ஒரு இந்தியன் என்ற சாயலும் வரக்கூடாது. உலகில் பிற கம்போஸ்சர்கள் இசைத்து இருக்கும் இசையை கேட்டு இருப்பதால் அந்த சாயலும் வந்து விடக்கூடாது. அதன் தாக்கமும் வந்து விடக்கூடாது. அவர்களை போல செய்து விட்டேன் என சொல்லலக்கூடாது. இவ்வளவு கட்டுப்பாடுகளையும் மீறி 35 நாட்களில் எழுதினேன்.
கர்சீப் கொண்டு வந்த கமல்
சிம்பொனி உங்கள் மனதில் என்னென்ன மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தி இருக்கும். எத்தனை பேர் அழுது இருப்பீர்கள் என்பது நன்றாக தெரியும் .
எனது சகோதரர் கமல் ஹாசன் கர்சீப் கொண்டு வந்தேன் என்று சொன்னார். கண்ணீர் விட்டு அழுவதற்கு சாட்சி கமல் ஹாசன் என தெரிவித்தார்.
இது போன்ற ஒரு விழா என் மனதில் உள் மெழுகாய் உருகும், கரையும் அதில் உலகம் மறந்து போகும் என்று சொல்வார்கள். முதல்வர் ஏற்பாடு செய்த இந்த இந்த பாராட்டு விழா போஸ்டர்களை பார்க்கும் பொழுது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி.
ஸ்டாலின் அவர்கள் மிக சாதாரணமாக அரசு சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்தி விடலாமா என்றார். எனக்கு நடத்துவதாக இருந்தால் சிம்பொனியை மக்களுக்கு செய்து காட்டலாம் என்றேன். அப்படியா உடனே செய்துவிடலாம் என்று சொன்னார்.
ஆனால் பிராக்டிக்கலாக ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த 87 பேரை சேர்ப்பது கடினமான விஷயம். அவர்களை மிகக் கஷ்டப்பட்டு உதவியாளர் ஸ்ரீராம் ஒருங்கிணைத்து அழைத்து வந்துள்ளார். அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் கண்டிஷன்களை கேட்டு அவர்களை அழைத்து வந்தது பெரிய சாதனை. ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீராமால்தான் இந்த விழாவை சாதிக்க முடிந்தது. உண்மையாய் நீங்கள் எதற்காக இந்த பாராட்டு விழாவை நடத்தினீர்கள் என்பது எனக்கு பிடிபடவே மாட்டேன் என்கிறது. நீங்கள் சாதாரணமாக சொல்லி விட்டீர்கள். எனக்கு மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் இரண்டு நாளுக்கு முன்னே எனக்கு போன் செய்து நாம் பண்ணதை அனைத்தையும் சொல்லப் போகிறேன் என சொன்னார்.
இளையராஜவின் அறிவிப்பு
உங்களுக்கு இந்த மேடையில் முதல்வர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களுக்கு ஒரு அறிவிப்பை சொல்கிறேன். இந்த அரங்கத்தில் இருப்பவர்கள் மட்டும் இசையை கேட்க முடிந்தது. இந்த இசையை நமது மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த இசையை வேறு எங்காவது கேட்டிருக்கிறீர்களா? எங்காவது கேட்டிருக்க முடியுமா? இந்த இன்பத்தை நேரடியாக கேட்டால் தான் நன்றாக இருக்கும் ரெக்கார்ட் செய்து கேட்டால் நன்றாக இருக்காது. 87 பேரும் ஒரே நோக்கத்தோடு ஒரே கவனத்தோடு இசையை கொடுப்பதில் இந்த இசை உயர்ந்ததாக இருக்கிறது எல்லோருடைய கவனமும் ஒரே இடத்தில் இருக்கிறது.
இந்த இசையை நேரடியாக கேட்கும் பொழுது தான் உள்ளம் கரைகிறது. கண்களில் கண்ணீர் வருகிறது. இது போன்ற உயர்ந்த இசையை கண்டு கொள்ளாமல் நாம் எதற்கு உயிர் வாழ வேண்டும். உயர்ந்த விஷயங்களை கண்டு கொண்டு அதைப்பற்றி மேலே செல்லாமல் பல விஷயங்களில் கவனத்தை சிதறடித்து கொண்டிருக்கிறோம். இந்த இசையை நமது மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்பதற்காக பெரிய மைதானத்தில் இதே இசைக் கலைஞர்களைக் கொண்டு வந்து நான் நடத்திக் காட்டுவேன் என்ற வாக்குறுதியை கொடுக்கிறேன். இதற்கு தமிழக முதல்வர் என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்வார் என நம்பிக்கை இருக்கிறது. என் மீதான அன்பில் அவர் கண்டிப்பாக அதை செய்வார். அந்த நாள் விரைவில் வரும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்” என்றார்.