’பிரேமம்’ படம் மூலமாக ‘மலர் டீச்சர்’ ஆக ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. பிறகு ‘மாரி 2’, ‘என்ஜிகே’, ‘பாவ கதைகள்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ’கார்கி’, ‘அமரன்’ என்று வெவ்வேறு படங்களில் விதவிதமான பாத்திரங்களில் நடித்து மகிழ்வித்தார். அமீர்கான் மகன் ஜுனைத் கான் உடன் சாய் பல்லவி நடித்துள்ள ‘மேரே ரஹோ’ இந்திப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இது போக இந்தியில் தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூருடன் நடித்து வருகிறார்.
தெலுங்கு படங்களில் நடிக்கிற தமிழ், மலையாள நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சியாகத் திரையில் இடம்பெறுவதே இதுவரை வழக்கமாக இருந்து வந்துள்ளது. நித்யா மெனன் போன்ற ஒரு சிலரே அதில் விதிவிலக்காக இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் இடம்பெறுபவர் சாய் பல்லவி என்ற பாராட்டை ரசிகர்களிடம் பெற்றவர்.
அப்படிப்பட்டவர் நீச்சல் உடையில் இருக்கிற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் ‘வைரல்’ ஆனால் என்ன ஆகும்?
சமீபத்தில் சாய் பல்லவியின் சகோதரி பூஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படிப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றன. சகோதரிகள் இருவரும் நீச்சலுடையில் வெளிநாட்டுத் தலமொன்றில் இருப்பதாக இருந்தன அப்புகைப்படங்கள்.
அவை வெளியானவுடன், ‘இவை ஏஐயால் உருவாக்கப்பட்டவையா’ என்ற கேள்வியே ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அதற்குச் சாய் பல்லவியே தற்போது விளக்கம் தந்திருக்கிறார். ‘அவை ஏஐயால் உருவாக்கப்பட்டவையல்ல; உண்மையான படங்கள் தான்’ என்று சொன்னவர், கூடவே தாங்கள் புகைப்படத்தோடு சில காட்சிகளையும் இணைத்து ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.
அதில் டாட்டூ இட்டுக் கொள்வது, கடற்கரை மணலில் சறுக்கி விளையாடுவது, கொலாஜ் ஓவியம் வரைவது, கடலில் டால்பின் பார்ப்பது என்று தான் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் சாய் பல்லவி. சுமார் எட்டே முக்கால் லட்சம் பேர் இதனை ‘லைக்’ செய்திருக்கின்றனர்.
இதற்கு முன் தான் அளித்த பேட்டிகளில், ‘எனக்கு ஜீன்ஸ் சர்ட் தான் கம்பர்ட்டபிள்’ என்று சேலை அணிந்தவாறே சொல்லியிருக்கிறார். அப்படியிருந்தும், இந்த நீச்சலுடை புகைப்படங்கள் அவரது தீவிர ரசிகர்களைக் கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.