ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிகள், வழக்கறிஞர்கள் என சுமார் 30 பேர் கைதாகினர்.
விசாரணை நீதிமன்றத்தில் 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை செம்பியம் போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதல் குற்றவாளியாக ஆயுள் தண்டனை கைதியான வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டார்.
சமீபத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு மருத்துவர் மூலம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
நீதிபதி என். சதீஸ்குமார் முன்பு ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி, ”நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு மருத்துவர் மூலம் செய்ய வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்தார்.
இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி, “இதனை மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு இன்று மதியம் 1 மணிக்கு விசாரிக்கப்படும்” என அறிவுறுத்தியுள்ளார்.