அஞ்சாமல் இப்போ பார்க்கலாமா அஞ்சான் 2025 ?- விமர்சனம்

Published On:

| By Minnambalam Desk

தமிழ்நாட்டில் இருந்து கிருஷ்ணா என்ற உடல் ஊனமுற்ற இளைஞன் (சூர்யா)தான் அண்ணன் ராஜூவை தேடி மும்பை போகிறான். தன் அண்ணனோடு ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து இ இப்போது பெரும் பெரும் புள்ளிகளாக இருக்கும் நபர்களை போய்ப் பார்க்கிறான் .

ராஜு கடத்தல் உள்ளிட்ட பல அடாவடிகளில் ஈடுபடும் ஒரு குட்டி தாதா .. அவனது நண்பன் சந்துரு (வித்யுத் ஜம்வால்)இருவரும் சேர்ந்து பல சம்பவங்கள் செய்கிறார்கள். எனினும் அவர்கள் கொஞ்சம் நல்லவர்களும் கூட. இவர்களை பிடிக்க சரியான சமயம் பார்த்துக் காத்திருக்கும் கமிஷனரின், மகள் (சமந்தா) ராஜூவைக் காதலிக்கிறாள்.

ADVERTISEMENT

    ராஜுவும் சந்துருவும் மும்பையிலேயே பெரிய டான் (மனோஜ் பாஜ்பாய் ) ஒருவனை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க, அவன் இருவரிடமும் “இந்த லெவலுக்கு மேலே வளர நினைத்தால் ..” என்று ஆரம்பித்து கேவலமாகப் பேச சந்துருவால் அதைத் தாங்க முடியவில்லை.. அவன் மிகவும் மனம் வருந்த, அதைப் பொறுக்க முடியாத ராஜு டானை கடத்தி வந்து சந்துரு முன் நிற்க வைக்க, சந்துரு பதிலுக்கு டானை அதே கேவல வார்த்தைகளில் திட்டி எச்சரித்து அனுப்பி வைக்கிறான்.

    வெறி கொண்ட டான் துரோகிகள் மூலம் சந்துருவை வெட்டிக் கொல்கிறான் . ராஜுவின் ஆளாக இருந்து டானின் ஆளாக மாறிய ஒருவன் ராஜூவை சுட்டுப் பொசுக்கி ஆற்றில் வீசுகிறான் .

    ADVERTISEMENT

    இதை எல்லாம் அறிந்து கொண்ட மாற்றுத் திறனாளி கிருஷ்ணா என்ன செய்தான்? என்பதே….

    திருப்பதி பிரதர்ஸ் சார்பில் சித்தார்த் ராய் கபூரும் சுபாஷ் சந்திர போஸும் தயாரிக்க, சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால் , மனோஜ் பாஜ்பாய் , நடிப்பில் லிங்குசாமி இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அஞ்சான் . கேப்டன் கான் என்ற பெயரில் வங்காள மொழியிலும் இந்தப் படம் ரீமேக் ஆனது. இப்போது தமிழில் தொழில் நுட்ப மாற்றங்களுடன் மீண்டும் வெளிவந்திருக்கிறது.

    ADVERTISEMENT

    உண்மையில் இது லிங்குசாமி, கார்த்திக்கு சொல்ல வைத்திருந்த கதை. தம்பியிடம் இருந்து அண்ணா சூர்யாவுக்குப் போனது.

    மிகுந்த எதிர்பார்ப்பு பெருத்த பொருட்செலவு என்ற நிலையில் மும்பையில் கடும் உழைப்பில் எடுக்கப்பட்டு வெளிவந்த இந்தப் படம்தான், வெறுப்பாளர்களின் கிண்டலில் அதிகம் சிக்கிய முதல் படம். இன்று சூர்யாவின் கங்குவா வரை அதே நிலைமை என்றாலும் அன்று அஞ்சான் மீதான கிண்டல் லிங்குசாமியை குறி வைத்தே செய்யப்பட்ட்டது ..

    எனினும் அந்தப் படம் டெக்னிக்கல் ஆக மிக நல்ல படம் . படத்தின் நீளமும் சொன்ன விதமும் அன்று பிரச்னையாக ஆனது .

    இந்த நிலையில் இன்று வரும் படங்களுக்கு மத்தியில் இப்போது அஞ்சான் பெரிதாக ஓடும் என்ற முடிவில் படத்தின் நீளம் குறைத்து சில மாற்றங்கள் செய்து படத்தை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி

    புதிய அஞ்சான் எப்படி இருக்கிறது பார்ப்போம்

    முன்பு அஞ்சான் படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் . இப்போது ஒரு மணி நேரம் ஐம்பத்து ஒன்பது நிமிடங்கள். அதாவது நாற்பத்தி ஒரு நிமிடம் படத்தைக் குறைத்து இருக்கிறார்.

    முக்கியமாக கிருஷ்ணா மும்பைக்குப் போய் அவன் அண்ணனைத் தேட அப்புறம் ராஜு வின் கதை சொல்லப்படும்.

    இப்போது அது மாற்றப்பட்டு எடுத்த உடன் ராஜுவின் கதை காட்டப்படுகிறது .

    கிருஷ்ணாவுக்கு மும்பையில் உதவி செய்யும் டிரைவர் கேரக்டரில் சூரி நடித்து இருப்பார். முதலில் அந்த கேரக்டருக்கு பேசப்பட்டவர் விவேக். அவரது கால்ஷீட் இல்லாத காரணத்தால் சூரி வந்தார். படம் வந்த போதே சூரி நடித்த காட்சிகள் அப்போதே போரடிப்பதாகவே பார்க்கப்பட்டது . இப்போது மொத்தமாக அதை தூக்கி விட்டார்கள் . இப்போதைய படத்தில் சூரி ஒரு காட்சியில் கூட இல்லை .

    இப்போது இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் படம் நேரம் போவதே தெரியாமல் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

    ஒவ்வொரு ஷாட்களை ரசனையாக அழகாக செதுக்கி செதுக்கி எடுத்து இருப்பது இப்போதும் பிரம்மிக்க வைக்கிறது .

    காதலில் இருக்கும் சூர்யா ஒரு எரியாத குண்டு பல்பை தொட்ட உடன் அது எரிவது ,சமந்தா சந்தோஷமாக உணரும்போது பின்னால் வண்ண வண்ண பலூன்கள் பறப்பது,

    கிருஷ்ணா வரும் சிசிடிவி ஃ புட்டேஜை வில்லன் பார்த்தது முடித்து, மீண்டும் பார்க்கையில் கிருஷ்ணா திரையில் தெரிய, அதை நிப்பாட்டுங்க என்று வில்லன் கத்த , அதிரும் உதவியாளர்கள் இது பழைய புட்டேஜ் இல்லை சார் . நிஜமாவே வந்துட்டு இருக்கான் ‘ என்று சொல்லும் டுவிஸ்ட் இப்போதும் அதே ஜோரில் இருக்கிறது.

    சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு , யுவன் சங்கர் ராஜாவின் இசை , ஆண்டனியின் ஒளிப்பதிவு இவை எல்லாம் இப்போது பார்க்கும்போதும் அசத்துகிறது.

    சூர்யா சரசரவென்று முன்னேறிக் கொண்டு இருந்த கால கட்டம் அது . அந்த உத்வேகம் இப்போது பார்க்கும்போதும் புரிகிறது .

    என்ன அழகான இளமையான சமந்தா ! ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும் போது தான் அவரது தோல் சம்மந்தப்பட்ட பிரச்னை முதன் முதலில் வந்தது.

    இடைவேளைக்குப் பிறகு சமந்தா எங்கே இருக்கிறார் என்று தெரியாத சோகத்தில் இருக்கும் போது சட்டென்று ”ஏக் தோ தீன் சார் சொல்லிக்கடி…” பாட்டு இப்போது வருவது பொருத்தமற்ற பெரும் திணிப்பாக இருக்கிறது. . அன்று அந்த நீளத்தில் இந்த பாடல் ஓகே . இன்று… ம்ஹும்!

    ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக் காட்சிகள் இப்போதும் பொறி பறக்கின்றன .

    “என் சாவு எப்போங்கறத நான்தான் முடிவு பண்ணுவேன் . உன் சாவு எப்போங்கறதையும் நான்தான் முடிவு செய்வேன். “

    “நம்ம எதிரி கிட்ட கூட துரோகிகள் இருக்கக் கூடாது” போன்ற வசனங்கள் இப்போதும் மாஸாகவே இருக்கிறது .

    சினிமா பேட்டர்ன் ஸ்டைல் மாறி இருப்பதால், இதன் பழமை தெரிவது மட்டுமே ஒரு குறை.

    இப்போ வந்திருக்கும் இந்த நறுக்குத் தெறிக்கும் அஞ்சான், 2014 ஆம் ஆண்டிலேயே வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?

    அஞ்சான் 2025 .. கொஞ்சம் தைரியமாக இருக்கிறது . ஆனா பத்தல

    — ராஜ திருமகன்

    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
    Join Our Channel
    Share