தென் அமெரிக்காவின் சிறிய நாடான சுரிநாமில் (Suriname), இதுவரை அந்த நாடு கண்டிராத ஒரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைநகர் பரமரிபோவிற்கு (Paramaribo) அருகே, ஒரே நபர் தனது சொந்தக் குழந்தைகள் மற்றும் அண்டை வீட்டார் என மொத்தம் 9 பேரை வெறித்தனமாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
நடந்தது என்ன? பரமரிபோவின் கிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘ரிச்சலியூ’ (Richelieu) என்ற பகுதியில் சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 43 வயதான நபர் ஒருவர், தனது மனைவியுடன் தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மனைவி குழந்தைகளை அழைத்துச் செல்ல மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், வீட்டில் இருந்த தனது சொந்தக் குழந்தைகளைத் தாக்கத் தொடங்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டாரையும் அவர் விட்டுவைக்கவில்லை. கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாகக் கத்தியால் தாக்கியுள்ளார்.
9 பேர் பலி – 5 குழந்தைகள்: இந்தக் கோரத் தாக்குதலில் 5 குழந்தைகள் மற்றும் 4 பெரியவர்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இதில் 4 குழந்தைகள் அந்த நபருடையவர்கள் என்பதுதான் வேதனையின் உச்சம். மேலும் ஒரு குழந்தையும், ஒரு பெரியவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் நடவடிக்கை: சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரையும் அந்த நபர் தாக்க முயன்றார். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை காலில் சுட்டுப் பிடித்தனர். தற்போது அவர் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மனநலப் பாதிப்புகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி வேதனை: சுரிநாம் அதிபர் ஜெனிபர் சிமன்ஸ் (Jennifer Geerlings-Simons), “குடும்பமும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய நேரத்தில், இப்படி ஒரு கொடூரம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
அமைதி இழந்த சுரிநாம்: சுரிநாம் பொதுவாக அமைதியான நாடு. ஆனால், 2024-ம் ஆண்டில் மட்டும் அங்கு கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இருப்பினும், ஒரே நாளில் 9 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அந்த நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
