சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது திட்டத்தை தொடங்கிய பின் முன் தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கு தடை இல்லை என்று கூறியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2017 ஆம் ஆண்டு அறிக்கை, பொதுத் திட்டங்களை தொடங்கிய பின் அந்தத் திட்டங்களுக்கு முன்தேதியிஒட்டு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க வழிவகுத்தது.
இது தொடர்பான அறிவிக்கையில், சுற்றுச்சூழல் அனுமதியை முன்கூட்டியே பெறாமல் கட்டுமானம் தொடங்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை அபராதம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் ரத்து செய்தது.
நீதிபதிகள் ஏ. எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு, திட்டங்களை தொடங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம் என்று கூறி 2006 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஒழுங்குமுறைபடுத்தவும் தடை விதித்தனர்.
அதாவது திட்டங்களை தொடங்குவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம் என்ற உத்தரவு சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் திட்டங்கள் செயல்படுத்துவதை தடுத்தது.
எனவே இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நேற்று (நவம்பர் 18) விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி பி ஆர் கவாய், நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு 2:1 என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன், கடந்த மே மாதம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெறுவதாக கூறினர்.
கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பால், பல பொது திட்டங்களை இடிக்க நேரிடும். இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
“மத்திய அரசின் 8,293 கோடி ரூபாய் மற்றும் மாநில அரசுகளின் 11,168 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முடிவு பெறாமல் உள்ளன. விமான நிலைய கட்டுமானம், கழிவு நீர் நிலையங்கள் சம்பந்தப்பட்ட கட்டுமானங்கள் பாதிக்கப்படும்.
மே மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பை திரும்ப பெறாவிட்டால் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்கள் பாதிக்கப்படும்.
இவற்றில் ஒடிசா எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கர்நாடகா பசுமை விமான நிலையம் உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த திட்டங்களை இடிப்பது அல்லது நிறுத்தி வைப்பதன் மூலம் அரசு கருவூலத்திலிருந்து செலவிடப்பட்ட பணத்தை குப்பைத்தொட்டியில் வீசுவதற்கு சமம். இது பொதுநலனுக்கு உகந்ததா என்ற கேள்வியும் எழுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
பொதுநலன் மற்றும் முந்தைய தீர்ப்பில் இருந்த சட்ட ரீதியான குறைபாடுகளை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த மே மாத அமர்வில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி உஜ்ஜல் புயான் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
கடந்த மே மாதம் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்வதற்கு தகுதியானது. முன்தேதியிட்டு அனுமதி பெற்று கட்டப்படும் கட்டுமானங்களை இடித்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்று முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்க முடியாது. இது ஒரு பின்னோக்கிய நடவடிக்கை. முன் தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது என்பது சுற்றுச்சூழல் சட்டத்துக்கு விரோதமானது.
முன் தேதியிட்டு அனுமதி வழங்குவது நீடித்த வளர்ச்சிக்கான தேவை, சுற்றுச்சூழலை காப்பதற்கான முன்னெச்சரிக்கை கொள்கை ஆகியவற்றுக்கு முரணாக உள்ளது” என்று தெரிவித்தார்.
எனினும் பெரும்பான்மை அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு இறுதி செய்யப்பட்டது.
