துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் பதவி விலக, தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்ததும் முக்கிய காரணம் என்கின்றன டெல்லி தகவல்கள். Jagdeep Dhankhar
தமிழக அரசின் வழக்கில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து தீர்ப்பளித்தது.
அப்போது உச்சநீதிமன்றத்தை மிகக் கடுமையாக விமர்சித்தவர் ஜெகதீப் தன்கர். ‘உச்சநீதிமன்றத்தால் ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா? ஜனாதிபதியை நீதிமன்றம் இப்படியெல்லாம் வழிநடத்த அனுமதிக்க முடியாது’ என்றெல்லாம் கொந்தளித்தவர் ஜெகதீப் தன்கர். அதேபோல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நாடாளுமன்றத்துக்கே அதிக அதிகாரம் என்பதையும் வலியுறுத்தி வந்தார் ஜெகதீப் தன்கர்.
ஆனால் நீதித்துறையுடனான ஜெகதீப் தன்கரின் இத்தகைய தொடர் மோதலை மத்திய அரசு விரும்பவில்லை என்கின்றன டெல்லி தகவல்கள்.
அத்துடன், கட்டு கட்டாக லஞ்ச பணத்துடன் சிக்கிய அலகாபாத் நீதிபதி வர்மா விவகாரத்தில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொடுத்த தகுதி நீக்க நோட்டீஸை ஜெகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டார்; ஆனால் இதனை மத்திய அரசு விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் ஜெகதீப் தன்கர் மோதல் போக்கை கடைபிடித்தார்; இதனாலேயே திடீரென தமது பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துவிட்டார் என்றும் டெல்லி பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.