அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க, பணி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test- TET) கட்டாயம் என்கிற உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பால் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.50 லட்சம் பேருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரசுகளின் உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? (TET) என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 1) தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில்,
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (தொடக்க, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்) அந்த பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வு -TET கட்டாயம்
- மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 1 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்.
- ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு
- ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயம்
- TET தேர்வு எழுத விரும்பாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேறலாம்
- TET தேர்வு எழுத விரும்பாத ஆசிரியர்கள் ஓய்வு கால சலுகைகளைப் பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வு பெற்றுக் கொள்ளலாம்
- அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு TET தேர்வு பொருந்துமா? என்பதை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் 142-வது பிரிவின் கீழ் இந்த தீர்ப்பை வழங்கியதால் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது என்கின்றன ஆசிரியர் சங்கங்கள்.
மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் சுமார் 1.50 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என்பது ஆசிரியர் சங்கங்கங்களின் குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில்
- தொடக்க பள்ளிகளில் 62,979 ஆசிரியர்கள்
- நடுநிலைப் பள்ளிகளில் 49,547 ஆசிரியர்கள்
- உயர்நிலைப் பள்ளிகளில் 31,537 ஆசிரியர்கள்
- மேல்நிலைப் பள்ளிகளில் 82,033 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
- அரசு பள்ளிகளில் மொத்தம் 2,28,990 ஆசிரியர்கள்
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 76,360 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்
- இவர்களில்
- முதுநிலை ஆசிரியர்கள் 75,000 பேர்
- 5 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறுவோர் 50,000 பேர்
- தகுதித் தேர்வு எழுதி பணியில் சேர்ந்தோர் 35,000 பேர்
இவர்களை தவிர்த்து எஞ்சியிருப்பவர்கள் அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் 1.50 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்கள்.
தனியார் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் தவிர்த்து 1.57 லட்சம் ஆசிரியர்களும் தகுதித் தேர்வை எழுத வேண்டியவர்கள்.
ஆகையால் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தடை கோரி தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை.