ADVERTISEMENT

மாநில உரிமைகளில் நீங்கள் தலையிடவில்லையா? – டாஸ்மாக் வழக்கில் EDக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Kavi

மாநில உரிமைகளில் நீங்கள் தலையிட வில்லையா என்று டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. 

ADVERTISEMENT

கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டது அமலாக்கத் துறை. 

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அமலாக்கத்துறை விசாரணையை தொடர உத்தரவிடப்பட்டது. 

ADVERTISEMENT

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மனு மீண்டும் இன்று (அக்டோபர் 14) தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் காவல்துறை விசாரிக்க முடியாதா? கூட்டாட்சி அமைப்புக்கு என்ன ஆனது? அமாலாக்கத் துறை விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினர். 

தொடர்ந்து தலைமை நீதிபதி, ‘கடந்த ஆறு ஆண்டுகளாக நான் பல்வேறு அமலாக்கத் துறை வழக்குகளை பார்த்திருக்கிறேன். குறிப்பிட்டு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. இல்லையென்றால் அதுவும் ஊடகங்களில் செய்தியாகிவிடும்’ என்று கூறினார்.

இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ‘ஊடகங்கள் பொதுவாக மத்திய அமைப்புக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதில்லை. எங்களுக்கு சாதகமாக அரிதாகவே செய்திகள் பதிவாகும்’ என்று கூறினார்.

தொடர்ந்து மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ‘ஒரு அரசு நிறுவனத்தை அமலாக்கத் துறையால் எப்படி சோதனை செய்ய முடியும்? நிர்வாக இயக்குனர்கள் மீது சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்த கணினி போன்றவற்றை அமலாக்கத் துறை கைப்பற்றியிருக்கிறது. இதெல்லாம் எப்படி செய்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு அமலாக்கத்துறை சார்பில், ‘டாஸ்மாக் நிறுவனத்தில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளன. 47 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் சில முக்கிய குற்றங்கள் குறித்து விசாரித்து வருகிறோம். இந்த அதிகாரிகள் எல்லோருக்கும் பணம் எப்படி பரிமாறப்படுகிறது என்பதற்கான பாதையும் இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு பதில் அளித்து வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ’பண மோசடி தடுப்புச் சட்ட விதிகளின்படி அமலாக்கத்துறையில் மாநில காவல் துறையுடன் எந்த தகவலையும் பகிரலாம். இதில் பெரும்பாலான எஃப்ஐஆர்கள் முடிக்கப்பட்டுள்ளன’ என்றார். 

இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொல்லிட்டர் ஜெனரல் ராஜு, ’டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல’ என்று மீண்டும் தெரிவித்தார். 

இதற்கு தலைமை நீதிபதி கவாய், ‘உங்களது செயல்பாடுகள் மாநில உரிமையில் தலையிடுவது போல் இல்லையா? உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா? டாஸ்மாக் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அமலாக்கத்துறை ஏன் ஆர்வம் காட்டுகிறது?’ என்ற கேள்வி எழுப்பினார். 

இதற்கு அமலாக்கத் துறை சார்பில், மது கடைகள் மற்றும் மது விநியோக நிலையங்களில் ஊழல் நடந்திருக்கிறது. அவர்கள் மாநில அரசின் பாதுகாப்பில் உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த சூழலில் மீண்டும் கூட்டாட்சி அமைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாங்கள் விவாத போட்டி நடத்த வரவில்லை என்று குறிப்பிட்டனர். 

தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தமிழ்நாடு சார்பில் ஆஜராகி, ’அமலாக்கத்துறை டாஸ்மாக் அதிகாரிகளின் தனிப்பட்ட மொபைல் ஃபோன்களையும் பறிமுதல் செய்துள்ளது. நீங்கள் யாருடைய போனையும் அதில் உள்ள தரவுகளையும் எடுத்துச் சென்று விட முடியுமா? இது சட்டப்பிரிவு 21- ஐ மீறுவதாகும், அந்த போன்களில் எல்லா விதமான தகவல்களும் இருக்கும்’ என்று குறிப்பிட்டார். 

இதற்கு பதில் அளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ’தங்களுடைய தனி உரிமை பாதிக்கப்படுகிறது என்று கூறுபவர்கள் தற்போது நீதிமன்றத்தின் முன் இல்லை. நாங்கள் எந்த அலுவலகத்தையும் சீர்குலைக்கவில்லை. சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து இதை காணலாம். இப்போது பண மோசடி நடந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் உள்ளிட்டோர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை விசாரணையின் போது யாரும் மிரட்டப்படவோ அல்லது கட்டாயப்படுத்தப்படவோ இல்லை. அனைத்தும் முறையாகதான் நடந்தது’ என்று தெரிவித்தார். 

வீட்டிற்கு கூட செல்ல விடாமல் டாஸ்மாக் அதிகாரிகளை அமலாக்கத்துறை துன்புறுத்தியதாகவும் இரவில் கூட பெண்களை விசாரித்து துன்புறுத்தியதாகவும் தமிழக அரசு முன்வைத்த வாதங்களுக்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்தது. 

விசாரணை முடிந்ததற்கு பிறகு குறிப்பிட்ட நேரத்தில் பெண் அதிகாரிகள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கூறியது.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் மதியம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறையில் ECIRல் அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் இருந்ததை குறிப்பிட்டு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அவர் கைது செய்யப்பட்டாரா? என்ற கேள்விக்கு, ’செந்தில் பாலாஜி இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை. வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் தான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது ஆவணங்கள் அடிப்படையில் தெரிய வருகிறது. அதன் அடிப்படையில், தகவல் அறிக்கையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவரை கைது செய்யும் எண்ணமில்லை’ எனத் தெரிவித்தார் அமலாக்கத் துறை வழக்கறிஞர்.

இதற்கு தலைமை நீதிபதி, ‘அவர்(செந்தில் பாலாஜி) மீது பெரும்பாலான குற்றச்சாட்டுகள் உள்ளன’ என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம் என்று தெரிவித்த நீதிபதிகள் அமலாக்கத் துறையின் சட்டப்பிரிவுகளுக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீதான வழக்குகள் முடிவடைந்தபின், இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர்.

அதுவரை, டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share