திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 4) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக வாக்காளர்களின் தனிமனித உரிமையை மீறும் வகையில் திமுகவினர் ஆதார் எண், ஓடிபி உள்ளிட்ட விவரங்களை கேட்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திமுக உறுப்பினர் சேர்க்கையின் போது ஓடிபி பெற இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா , ஏ.எஸ்.சந்தோர்கர் அமர்வில் இன்று (ஆகஸ்ட் 4) விசாரணைக்கு வந்தது.
அப்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “நீதிமன்றத்தின் உத்தரவால் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் என்ன செய்ததோ, அதையே திமுகவும் செய்தது. நாங்கள் ஆதார் விவரங்கள் எதையும் கோரவில்லை” என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “நீதிமன்றம் குடிமக்களை பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.
மேலும், “இந்தப் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்தது. முழு செயல்முறையும் சந்தேகத்திற்குரியது. நீங்கள் உயர் நீதிமன்றத்தையே நாடலாம். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.