கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரித்த நிலையில் எப்படி சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்து கொண்ட பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கூறி தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டது.
தற்போது இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (டிசம்பர் 12) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் நோக்கம் என்ன என நிதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் கரூர் சம்பவம் தொடர்பான ரிட் மனுவை விசாரித்ததில் சில தவறுகள் உள்ளது என கருதுகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசு சார்பில், ‘அருணா ஜெகதீசன் ஆணையம் மீதான தடையை நீக்கி விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் பரிந்துரைகளை ஒரு நபர் ஆணையம் வழங்கும். எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறையை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை நடக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை எப்படி விசாரணைக்கு எடுத்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தர வேண்டும். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அது குறித்து விசாரிக்கலாம் பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
