இவர் தண்டனை குறைப்பு கோர தகுதியுடையவரா?: பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published On:

| By Kavi

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ் பெண்ணின் தந்தை நீதிமன்றக் காவலில் மரணமடைந்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்திருந்தது.இந்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 9) மறுத்துவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வாக இருந்த குல்தீப் சிங் செங்கர், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் குல்தீப் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். . 

ADVERTISEMENT

இதற்கிடையே செங்கரின் தூண்டுதலின் பேரில் அந்தப் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். 2018 ஏப்ரல் 9அன்று, காவல்துறை காவலில் இருந்தபோது கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகி அவர் உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் மரணத்துக்கு காரணமான குல்தீப் செங்கர் மற்றும் அவருடன் தொடர்புடையர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் செங்கர் மனு தாக்கல் செய்தார். ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செங்கர் மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இந்த மனு இன்று (பிப்ரவரி 9) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது செங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்  சித்தார்த் தேவ்,   “முன்னாள் எம்.எல்.ஏ-வான செங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அவர் ஏறக்குறைய முழுமையாக அனுபவித்து முடித்துவிட்டார்.  10 ஆண்டு கால தண்டனையில், 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களை அவர் ஏற்கனவே சிறையில் கழித்துவிட்டார். ஆனால், சிறைவாசத்தின் கால அளவு முக்கியமல்ல என்று உயர் நீதிமன்றம் கூறுகிறது” என்று வாதங்களை முன்வைத்தார். 

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி,  “உண்மையில் அவர் 7 ஆண்டுகள் சிறை தண்டனையைத் தான் கழித்திருக்கிறார்.  இத்தகைய வழக்குகளில், நீங்கள் தண்டனைக் குறைப்பு கோர தகுதியுடையவரா என்பது மிகவும் விவாதத்திற்குரியது” என்று குறிப்பிட்டார்.

சி.பி.ஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில், செங்கருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகால சிறை தண்டையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க  வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செங்கருக்கு ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்தனர்.  

செங்கர் தனது 10 ஆண்டு கால சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். 

இந்த மேல்முறையீட்டை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், செங்கரின் மேல்முறையீட்டு மனுவோடு இணைத்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share