வனுவாட்டு என ஒரு நாடு இருக்கிறதா? கைலாசா (நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லும் நாடு) போல கற்பனையானதா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிண்டலாக கேள்வி எழுப்பினர்.
மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட தாம் ஓராண்டாக விசாரணை கைதியாக இருப்பதாகவும் தமக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஜாமீன் தர மறுக்கிறது; ஆகையால் ஜாமீனில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என ‘வனுவாட்டு’ நாட்டைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 17) விசாரித்தது.
இந்த விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தேவ்விடம், “மனுதாரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?” என நீதிபதி சந்தீப் மேத்தா கேள்வி எழுப்பினார்.
இதற்கு, “மனுதாரர் ’வனுவாட்டு’ என்ற நாட்டைச் சேர்ந்தவர் என வழக்கறிஞர் சித்தார்த் தேவ் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, “அப்படி ஒரு நாடே இல்லையே.. கைலாசா மாதிரி” என சிரித்துக் கொண்டே கூறினார் நீதிபதி சந்தீப் மேத்தா.
ஆனால், ”வனுவாட்டு என்ற நாடு கரீபியன் தீவு பகுதியில் இருக்கிறது” என வழக்கறிஞர் சித்தார்த் தேவ் விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து, ”மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், பல்வேறு அடையாளங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்” என மேற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். மேலும், ”இந்த வழக்கு விசாரணை 6 அல்லது 8 மாதங்களில் முடிவடைந்துவிடும்” என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்தீப் மேத்தா, “மனுதாரரைப் பற்றி நாம் நிறையவே ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறதே” என கூறினார்.
இவ்வழக்கில் மனுதாரர் தமது ஜாமீன் கோரிய மனுவை திரும்பப் பெற்றதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வனுவாட்டு நாடும் கைலாசாவும்
வனுவாட்டு என்பது கரீபியன் தீவுகளில் உள்ள சுமார் 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு. நிலநடுக்கம், சுனாமி பேரழிவுகளை அடிக்கடி எதிர்கொள்ளும் நாடு.
கைலாசா என்பது இந்தியாவில் தேடப்படும் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தா சாமியார், தாம் உருவாக்கி உள்ளதாக அறிவித்த நாட்டின் பெயர். கைலாசா நாடு குறித்து பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்களில் நித்தியானந்தா கூறி வந்தாலும் அப்படி ஒரு நாடு உலகின் எந்த மூலையில் இருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
