அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28) ஒத்தி வைத்துள்ளது. Minister Senthil Balaji case
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில், செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தது.
இந்த வழக்கில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி சுமார் ஒரு ஆண்டுக்குப் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமினில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்த்து அமலாக்கத் துறை, அவரால் பாதிக்கப்பட்ட வித்யா குமார், ஒய்.பாலாஜி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையில் போலீசாரும் தமிழக அரசும் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது என்று ஒய். பாலாஜி தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் அதில், “சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.
அதன்படி, செந்தில் பாலாஜி மீதான வழக்குகளின் விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் நேற்று (பிப்ரவரி 27) தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாரணை நீதிமன்றம் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி, வழக்கு விசாரணையை மார்ச் 21 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. Minister Senthil Balaji case