சீமானுக்கு எதிரான நடிகை விஜயலெட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று (மே 2) உத்தரவிட்டுள்ளது. Supreme Court extends stay
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக, சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், “வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி. நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த மார்ச் 3-ஆம் தேதி உத்தரவிட்டனர்.
இந்தவழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.பி. நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களான தமிழக காவல்துறை மற்றும் விஜயலட்சுமி தரப்பு ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். Supreme Court extends stay