அமலாக்கத் துறை நோட்டீசுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று (ஜனவரி 27) உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை (ED) வழங்கிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் வீட்டு வசதி, வருவாய், சிறைத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.2.35 கோடி மதிப்பிலான சொத்துகளை அவர் மற்றும் குடும்பத்தினர் (மனைவி P.சுசீலா, மகன்கள் P.செந்தில்குமார், P.பிரபு) சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழல் தடுப்புத் துறை போலீசார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த விவகாரத்தின் அடிப்படையில், ஐ.பெரியசாமி மற்றும் குடும்பத்தினர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இதன்படி, ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமார், மகள் இந்திரா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது முதலீடு, வங்கிக் கணக்கு, சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரியும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் ஐ.பெரியசாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜான் சத்தியன், சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பதால், அமலாக்கத் துறை விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதன்பின்னர் ஜனவரி 5-ஆம் தேதி இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஐ.பெரியசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
