நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனமான மெட்டாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல கோடி பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், 2021ல் வாட்ஸ் அப் தனது கொள்கைகளை மாற்றியது.
பேஸ்புக் உடன் தகவல்களைப் பகிர அனுமதிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த அறிவிப்பில், பயனர்கள் வாட்ஸ் அப் தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்த புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டும். இல்லையென்றால் வாட்ஸ் அப் தளத்திலிருந்து வெளியேறலாம் என்று கூறியது.
அதுவே 2016 கொள்கையில், தகவல்களைப் பேஸ்புக் உடன் பகிர வேண்டாம் என்று சொல்லும் உரிமை பயனர்களுக்கு இருந்தது. இந்தசூழலில் 2021ல் கொண்டு வந்த மாற்றம் மூலம், பயனர்கள் போன் நம்பர், ஐபி முகவரி, பணப்பரிவர்த்தனை விவரங்கள் போன்றவற்றை மெட்டா நிறுவனத்தின் பிற செயலிகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளட்டவற்றுடன் பகிர்வது கட்டாயமாக்கப்பட்டது.
இதனால் பயனர்களின் தனியுரிமை மீறப்பட்டது. அதோடு, மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டது. இந்த கொள்கை மாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மெட்டா நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது.
ஆனால், இதை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 3) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜெய்மால்யா பக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “வெளியேறும் உரிமை (Opt-out) எங்கே இருக்கிறது. எங்கே உங்களது மொபைலை எடுத்துக்காட்டுங்கள்… இது என்ன தனி நபர்களின் ரகசியங்களை திருடுவதற்கு நாகரிகமான வழியா?
இந்தச் செயலிக்கு நுகர்வோரை எப்படி அடிமையாக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். இன்று எல்லோரும் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். பயனர்களுக்கு ‘வெளியேறும் உரிமை’ (Opt-out) இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம், அந்த உரிமை இருக்கிறது என்பது எப்படி அவர்களுக்கு எப்படித் தெரியும்?
அந்த வசதி எங்கே இருக்கிறது, வெளியேறும் உரிமை குறித்து செய்தித்தாள்களில் வருகின்றன என்கிறீர்கள். ஆனால் இது சாதாரண மனிதனுக்கு எப்படித் தெரியும்?” என்று வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
“தரவுப் பகிர்வு என்ற பெயரில், இந்த நாட்டின் தனிநபர் உரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனத்தை எச்சரித்த நீதிபதிகள், “இந்த நாட்டின் அரசியலமைப்பு நெறிமுறைகளை நீங்கள் கேலிக்குரியதாக்குகிறீர்கள். எங்கள் நாட்டு அரசியலமைப்பை உங்களால் பின்பற்ற முடியாவிட்டால், தயவு செய்து இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். குடிமக்களின் தனிநபர் தனியுரிமையில் சமரசம் செய்துகொள்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
சொல்லுங்கள்… மக்களின் தனியுரிமையில் விளையாடலாமா? வேறு வழியே இல்லை என்ற வகையில் நீங்கள் ஒரு ஏகபோகத்தை உருவாக்கியுள்ளீர்கள்
தமிழ்நாட்டின் ஒரு கிராமபுறத்தில் வாழும் ஒருவருக்கு அவருடைய சொந்த மாநில மொழி தான் தெரியும். அப்படிபட்டவருக்கு உங்களுடைய நிபந்தனைகள் எப்படி புரியும்?
முதலில் ஒரு உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுங்கள், அதன் பிறகு இந்த வழக்கின் தகுதி குறித்து நாங்கள் விசாரணை செய்கிறோம்” என்றும் நீதிபதிகள் கூறினர்.
அப்போது இந்திய போட்டி ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சமர் பன்சால்”மெட்டா நிறுவனத்துக்கு ஒட்டுமொத்த வருவாயும் விளம்பரங்கள் மூலமாகத்தான் வருகிறது. நாம்தான் (பயனர்கள்) இங்கே விற்பனைப் பொருட்கள். அதன் காரணமாகத்தான் வாட்ஸ்அப் இலவசமாக வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள் சட்டப்பூர்வமாக வருவாய் ஈட்டினால் எந்த தவறும் கிடையாது. தனி நபர் உரிமைகளை மீறக் கூடாது என்பதே எங்களுடைய கருத்து என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் வாட்ஸ் அப் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நீதிமன்றத்திற்கு விளக்க ஒரு பக்க பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும். நீதிமன்றம் அதனைப் பரிசீலித்த பிறகு முடிவெடுக்கலாம்” என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள், “இடைக்கால உத்தரவுக்காக இந்த வழக்கு வரும் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறது. அரசும் இது குறித்து தனது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
