தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை உடனே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 14) விசாரித்தனர்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் கைதான பெண் ஒருவர் போலீஸ் போர்வையில் வேறு யாரோ நான்கு பேர் தங்களை வந்து அடித்ததாக கூறுவது பதிவாகியுள்ளது.
தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், குமாரசாமி, ஆர் கிருஷ்ணகுமார், வேல்முருகன் உள்ளிட்டோர், “சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய தேவை என்ன? கைது செய்யப்பட்டவர்களை பார்க்ககூட அனுமதியில்லை. நாளை பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூட சொல்வார்கள்” என வாதிட்டனர்.
இந்தசூழலில் வழக்கறிஞர்களைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ரவீந்திரன், “அவர்கள் பேருந்துகளை சேதப்படுத்தினர், பெண் போலீசாரை தாக்கினர். இரவு 11.30 மணிக்கு இவர்கள் அங்கிருக்க வேண்டிய அவசியம் என்ன? உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கலைந்து செல்ல மறுத்ததால் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்” என்று வாதங்களை முன்வைத்தார்
“கைது செய்து 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றால் மட்டுமே அது சட்டவிரோத காவல். வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு நீதிபதிகள் நாங்கள் சட்டவிரோத கைது என்று சொல்லவில்லை, சட்டவிரோத தடுப்புக்காவல் என்று மட்டுமே சொல்கிறோம் என்று குறிப்பிட்டனர்.
மேலும், கைது செய்த பிறகுதான் பேருந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. முன்கூட்டியே வழக்கறிஞர்களை கைது செய்வதற்கு எந்த காரணங்களும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட ஆறு வழக்கறிஞர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
நிபந்தனைகளுடன் கூடிய விரிவான உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.