முகப்பரு என்பது பொதுவான ஒரு சருமப் பிரச்சனையாகவே உள்ளது. அனைத்து வயதினருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் முகப்பரு ஏற்படுகிறது. குறிப்பாக பதின்ம வயதினருக்கு முகப்பரு பிரச்சனை அதிகளவில் ஏற்படுகிறது. ஹார்மோன் மாற்றங்கள், பருவ வயதில் ஏற்படும் ஆண்ட்ரோஜன் அதிகரிப்பு ஆகியவை எண்ணெய் பசை உற்பத்தியை (sebum)அதிகரித்து, சருமத் துளைகளை அடைத்து, முகப்பருவை ஏற்படுத்துகின்றன.
அதாவது இந்த ஹார்மோன்கள் சருமத்தின் எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி அதிக எண்ணெயை உற்பத்தி செய்ய வைக்கின்றன. இதனால் பாக்டீரியாக்கள் பெருகி, வீக்கம் மற்றும் பருக்கள் உண்டாகின்றன.
எண்ணெய் பசை சருமம்: எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு அதிகப்படியான செபம் (sebum) சுரப்பால் முகப்பரு ஏற்படுகிறது. இது சருமத் துளைகளை அடைத்து முகப்பருவை உண்டாக்கும். இதைத் தடுக்க, நாள் இருமுறை மென்மையான க்ளென்சர் கொண்டு கழுவுதல், எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை செய்யலாம்.
முகப்பரு வராமல் தடுப்பது எப்படி? தினமும் இரண்டு முறை மென்மையான, எண்ணெய் இல்லாத (non-comedogenic) க்ளென்சர் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். எண்ணெய் சருமத்திற்கும் மாய்ஸ்சரைசர் தேவை. எண்ணெய் இல்லாத, நீரேற்றம் அளிக்கும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.
பருக்களைத் தொட வேண்டாம்: பருக்களைக் கிள்ளுவது அல்லது கசக்குவது தொற்று, தழும்புகளை ஏற்படுத்தும். பருக்களைத் தொடாமல் இருத்தல், முகப்பருவை அதிகரிப்பதைத் குறைக்கும். முகத்தையும் அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கைகளில் உள்ள பாக்டீரியா பருக்களில் பரவி மேலும் அதனை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது.
சரியான மேக்கப்-ஐ பயன்படுத்த வேண்டும்: முகத்தில் மேக்கப் செய்வதற்கு எண்ணெய் இல்லாத, நீர்சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள். பென்சோயில் பெராக்சைடு, அஸெலாயிக் அமிலம், நியாசினாமைடு போன்ற மருந்துப் பொருட்கள் பருக்களை சரிசெய்ய பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமான உணவு: காய்கறிகள், பழங்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது சருமத்தின் நீரேற்றத்தை மேம்படுத்தும். இதையெல்லாம் தாண்டி பருக்களால் மிகவும் தொல்லையை அணுபவிக்கிறீர்கள் அல்லது நிலைமை மோசமாக இருந்தால், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.
