அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீதான சூமோட்டோ வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்துள்ளார்
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்கள் சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஏப்ரல் 22)மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார்.
அப்போது அவர், “விடுவிக்கக் கோரிய மனு மீது முடிவெடுக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் ஆதாரங்களை ஆய்வு செய்யத் தேவையில்லை எனவும், விடுவித்துப் பிறப்பிக்கப்படும் உத்தரவில் காரணங்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை” எனவும் தெரிவித்தார்.
“சபாநாயகர், அரசு தலைமை வழக்கறிஞர், குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே, வழக்கு தொடர அளித்த அனுமதியைத் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மரணமடைந்து விட்டனர், பல சாட்சிகள் மரணமடைந்து விட்டனர். நீண்ட கால இடைவெளிக்குப் பின், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது
11 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும் ” எனவும் வாதிட்டார்.
ஓபிஎஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை வாதங்களுக்காக, வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏப்ரல் 30ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிரான சூமோட்டோ வழக்குகளுடன் இந்த வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது.
அமைச்சர் பொன்முடி மீதான சூமோட்டோ வழக்கும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதனை ஜூன் 18 – 21ஆம் தேதி வரை விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இந்தியாவில் அறிமுகமாகிறது கூகுள் வாலட்… கூகுள் பே நிலை என்ன?
மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை