மீண்டுமொரு ‘ஹாரர் காமெடி’யா..?!
ஒரு திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பைத் துளியளவு ஏற்படுத்தி, பின்னர் அதனை மலையளவு பெருக்குவதில் டீசர், ட்ரெய்லருக்கு முக்கியப் பங்குண்டு. சில நேரங்களில் திரும்பத் திரும்ப அவற்றைக் காணும்போது அப்படியொன்று சாத்தியப்படும். சமீபத்தில் அதனைச் சாதித்தது அபிலாஷ் பிள்ளை எழுத்தாக்கத்தில், விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், ஷிவதா, மாளவிகா மனோஜ், சித்தார்த் பரதன் உள்ளிட்ட பலர் நடித்த ‘சுமதி வளவு’ மலையாளத் திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர்.
இப்படம் ஹாரர் வகைமையில் அமைந்திருப்பதாகக் காட்டியது. கூடவே, சில ‘சிரிக்கும் தருணங்களும்’ படத்தில் இருக்கும் என்றுணர்த்தியது.
அதற்கேற்ப அமைந்திருக்கிறதா ‘சுமதி வளவு’?
பயமுறுத்தும் இடம்!
தமிழ்நாடு – கேரளா எல்லையையொட்டிய ஒரு கிராமம். இரு மாநிலங்களையும் பிரிக்கும் வனப்பகுதி வழியே ஒரு பாதை செல்கிறது. அங்கிருக்கும் ஒரு வளைவுக்கு ‘சுமதி வளைவு’ என்று பெயர். அந்தப் பெயர் வரக் காரணம், அங்கு ஒரு கர்ப்பிணிப் பெண் நரபலி கொடுக்கப்பட்டதே. அப்பெண்ணின் பெயர் தான் சுமதி.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில், அவர்களை ஊருக்குள் வர விடாமல் தடுப்பதற்காகச் சிலர் பேய்களின் சக்தியை அதிகப்படுத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒருபகுதியாக, அவர்களே சுமதியை ஏமாற்றி பலி கொடுக்கின்றனர். ஆனால், அவர்கள் கைப்பாவையாக ஆகாமல் பெருஞ்சக்தியாக மாறுகிறார் சுமதி.
காட்டில் தான் பலி கொடுக்கப்பட்ட பகுதியை ஆக்கிரமிக்கிறார். இரவு நேரத்தில் எவரும் அப்பகுதியைக் கடக்க சுமதி அனுமதிப்பதில்லை.
ஆனால், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது காதலருடன் அந்த ‘சுமதி வளவு’ கடந்து ஓடிப் போகிறார். அவருக்கு உதவி செய்கிறார் அப்பெண்ணின் சகோதரனது நண்பன்.
ஊரார் இந்த விஷயத்தைப் பலகாலமாகச் சொல்லி வந்தாலும், அந்த இளைஞர் அதனை ஏற்பதாக இல்லை. ‘நான் அதனைச் செய்யவே இல்லை’ என்று மறுக்கிறார்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரோ, அந்த இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் பகையாளிகளாகப் பார்க்கின்றனர். தங்கள் வீட்டுப் பெண்ணை அந்த இளைஞன் கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாக எண்ணுகின்றன.
இந்த நிலையில், அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணை அந்த இளைஞன் காதலித்தால் என்ன ஆகும்?
அந்த கேள்விக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி. அதனைத் திரையில் சொன்ன வகையில் நகைச்சுவையை அள்ளியிறைத்திருக்கிறது.
அதேநேரத்தில், அந்த இளைஞனால் மட்டும் எளிதாக ‘சுமதி வளவு’ இடத்தைக் கடக்க முடிகிறது எனும் கேள்விக்கு இப்படம் பதிலளிக்கவில்லை. அது இப்படத்தின் பலவீனம்.
அசத்தும் அர்ஜுன் அசோகன்!
இந்த படத்தின் நாயகன் அர்ஜுன் அசோகன், குறுகிய காலத்தில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்களில் நடித்து மலையாளத் திரையுலகில் புகழ் பெற்றவர். ’சுமதி வளவு’ மீது ரசிகர்கள் கவனம் வைக்கவும் அதுவே காரணம். அதற்கேற்ற நடிப்பை அவர் ‘அசத்தலாக’த் தந்திருக்கிறார்.
‘ஜோ’ படத்தில் வசீகரித்த மாளவிகா மனோஜ் இதில் நாயகி. அவர் வருமிடங்களை அப்படியே ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல.. அந்தளவுக்கு ‘அழகாக’த் திரையில் தெரிகிறார்.
கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், ஷிவதா, சித்தார்த் பரதன், ஷ்ரவண் முகேஷ், ஜஸ்ன்யா, குழந்தை நட்சத்திரங்கள் ஸ்ரீபத் யான், தேவநந்தா மற்றும் சில மூத்த கலைஞர்கள் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் இருக்கிறது. அனைவரும் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
’தலைவன் தலைவி’ படத்தில் விஜய் சேதுபதியின் கொழுந்தியாளாக வரும் ஜுஹி ஜெயகுமார் இதில் தலைகாட்டியிருக்கிறார்.

வேறு மொழிகளில் நாயகிகளாக நடிக்கத்தக்க முகங்களைச் சாதாரண பாத்திரங்களில் நடிக்க வைக்கிற வித்தை மலையாளத் திரையுலகினருக்கு எப்படி கைவருகிறதோ தெரியவில்லை.
அபிலாஷ் பிள்ளையின் எழுத்தாக்கத்தைத் திரையில் காட்சிகளாக பெயர்த்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணு சசி சங்கர்.
ஷங்கர் பி.வி.யின் ஒளிப்பதிவு, ஷபீக் முகம்மது அலியின் படத்தொகுப்பு, அஜய் மங்கட்டின் கலை வடிவமைப்பு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்களைத் தமது காட்சியாக்கத்திற்கு ஏற்ப ஒருங்கிணைத்திருக்கிறார்.
முக்கியமாக, ரஞ்ஜின் ராஜ் பின்னணி இசையை இயக்குனர் பயன்படுத்தியிருக்கும் விதம் அபாரம். அதுவே இப்படத்தின் ‘விசிட்டிங் கார்டு’ ஆக உள்ளது.

’ஹாரர்’ கதையைக் கொண்டிருக்கும் இப்படம், அவ்வகைமைக்கு நியாயம் சேர்க்கிற வகையில், அதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிற வகையில் மேலும் சில காட்சிகளைச் சேர்த்து நேர்த்தியான திரையனுபவத்தைத் தரத் தவறியிருக்கிறது.
அதேநேரத்தில், ’மீண்டும் ஒரு ஹாரர் காமெடி’ என்று சொல்லத்தக்க வகையில் ஆங்காங்கே சிரிப்பது போன்று சில காட்சிகள் இதில் இருக்கின்றன. அதனைச் செயல்படுத்தத் தேவையான அளவுக்குக் கதையில் வரும் பாத்திரங்களின் வார்ப்பு அமைந்திருக்கிறது.
இப்படிச் சில ப்ளஸ்கள், மைனஸ்களை கொண்டிருக்கிற ‘சுமதி வளவு’, இதன் ட்ரெய்லர், டீசர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது வருத்தமளிக்கும் விஷயம் தான்..!