ஒரு படத்தின் வெற்றி எந்தளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ, அதே பாணியில் பல படங்கள் உருவாவது ஒருகாலத்தில் வழக்கமாக இருந்தது. அதேமாதிரியான டைட்டில், கதையமைப்பு, பாத்திர வார்ப்பு என பல விஷயங்களை ‘காப்பி’யடிப்பது நிகழ்ந்து வந்தது. இப்போது, அதற்குப் பதிலாக அடுத்தடுத்த பாகங்களைத் தயார் செய்வதற்கான பணிகளில் சம்பந்தப்பட்ட படக்குழுவினரே ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
ஆக்ஷன், ட்ராமா, த்ரில்லர் படங்களை விட ‘ஹாரர்’ படங்களைப் பொறுத்தவரை இது வசதியானதொரு உத்தியாகிவிட்டது. அரண்மனை, காஞ்சனா படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வந்தது இதற்கான உதாரணங்கள். அந்த வரிசையில் இடம்பெறும் முனைப்பில் இறங்கியிருக்கிறது ஒரு மலையாளத் திரைப்படம்.

சமீபத்தில் விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில், அபிலாஷ் பிள்ளை எழுத்தாக்கத்தில், ரஞ்சின் ராஜ் இசையமைப்பில் வெளியானது ‘சுமதி வளவு’. இதில் அர்ஜுன் அசோகன், மாளவிகா மனோஜ், கோகுல் சுரேஷ், பாலு வர்கீஸ், சித்தார்த் பரதன், சைஜு குரூப், ஜூஹு ஜெயக்குமார், ஜஸ்னியா ஜெயதீஷ் உட்படப் பலர் நடித்திருந்தனர். இது கடந்த 1ஆம் தேதியன்று வெளியானது.
சிறிய பட்ஜெட்டில் தயாரான ’சுமதி வளவு’ தற்போது வரை சுமார் 20 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. விமர்சனங்கள் ‘சுமார்’ ரகத்தில் இருந்தாலும், இந்த வசூல் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, இப்போது ‘சுமதி வளவு 2 : தி ஒரிஜின்’ (Sumathi valavu 2 : THE ORIGIN) என்ற படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர், இசையமைப்பாளர், திரைக்கதையாசிரியர் என இதில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களில் பெரிதாக மாற்றமில்லை. ஆனால், நடிப்பைப் பொறுத்தவரை அதே நடிகர் நடிகையர் இடம்பெறுவார்களா எனத் தெரியவில்லை.

குறிப்பிட்ட இடத்தில் ஒரு பெண் பேயின் ஆதிக்கம் இருந்து வருவதாகவும், அதனால் அருகிலுள்ள கிராம மக்கள் இரவு வேளையில் அதனைக் கடக்க முடியாமல் அச்சத்தில் தவிப்பதாகவும் ‘சுமதி வளவு’ கதை அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதையில் வருகிற பேயின் பின்னணியைச் சொல்வதாக இப்படம் இருக்குமாம். அதனால், இதில் ‘காஸ்ட்டிங்’ முற்றிலும் புதிதாக இருக்குமென்று சொல்லப்படுகிறது.
அதேநேரத்தில், ‘பீரியட் பிலிம்’ ஆக இருக்குமென்பதால் அதிக பட்ஜெட்டில் தயாராவதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட ‘காந்தாரா’வை பிரதியெடுத்தாற்போல இக்குழுவின் அறிவிப்பும் முடிவும் அமைந்துள்ளது.
‘சுமதி வளவு’ படத்தைப் பார்த்த சிலர், ‘இந்த படமே காந்தாரா எபெக்டுல உருவானது தானே’ எனச் சொல்லக்கூடும். விரைவில் ‘காந்தாரா: தி பிகினிங்’ வெளியாகவுள்ள நிலையில், அதே போன்றதொரு வரவேற்பையும் கவன ஈர்ப்பையும் ‘சுமதி வளவு 2’வும் குவித்தால் நல்லதுதானே..!