இந்த ஆண்டு இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி (Sugar production) சிறப்பாக உள்ளது. அக்டோபர் 1 முதல் மார்ச் 15 வரை இந்திய ஆலைகள் 26.18 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரையை உற்பத்தி செய்ததாக ஒரு முன்னணி தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10.4% அதிகம் ஆகும். நாட்டின் மூன்று சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக மொத்த உற்பத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகளின் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி 7.86 மில்லியன் டன்னிலிருந்து 9.85 மில்லியன் டன்னாகவும், அண்டை நாடான கர்நாடகாவில் உற்பத்தி 17.1% அதிகரித்து 4.58 மில்லியன் டன்னாகவும் உயர்ந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் அதிகரிப்பு:
வடக்கு மாநிலமான உத்தர பிரதேசத்தில் உற்பத்தி ஓரளவு அதிகரித்து, 8.1 மில்லியன் டன்னிலிருந்து 8.15 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பருவத்தில் தொடங்கிய 533 சர்க்கரை ஆலைகளில் இதுவரை 333 நிறுவனங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாகவும் கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகளின் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தி மதிப்பீடுகள்:
இந்த மாத தொடக்கத்தில் அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் (AISTA) செப்டம்பர் மாதத்தில் முடிவடையும் நடப்பு பருவத்தில் 28.3 மில்லியன் டன் சர்க்கரையை இந்தியா உற்பத்தி செய்யும் என்று கூறியிருந்தது. இது முந்தைய மதிப்பீட்டான 29.6 மில்லியன் டன்களை விடக் குறைவுதான்.
ஏற்றுமதி உயர்வு:
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் சர்க்கரை ஆலைகள் 315,577 டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளன. இதில் முக்கிய இடங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான், தான்சானியா மற்றும் இலங்கை என உள்ளன. செப்டம்பரில் முடிவடையும் நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில் 2 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
