நெல்லையில் ஐடி ஊழியர் கவின் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது காதலியான சுபாஷினி இன்று (ஜூலை 31) வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர்-தமிழ்ச்செல்வி என்பவரது மகன் கவின். இவர் நெல்லையைச் சேர்ந்த சுபாஷினி என்ற வேறு ஜாதி பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், பாளையங்கோட்டையில் வைத்து கவினை வெட்டி சாதி ஆணவ படுகொலை செய்தார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
கொலை செய்த சுர்ஜித்தின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் சரவணன், தாய் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சுர்ஜித்தின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் சரணவன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கவினின் காதலியான சுபாஷினியின் புகைப்படத்தை வெளியிட்டு பலரும் கருத்துகள் தெரிவித்து வந்த நிலையில் முதன்முறையாக இன்று வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், “நான் தான் சுபாஷினி. எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்பது , எனக்கும் அவனுக்கும் மட்டும்தான் தெரியும். எங்க ரிலேஷன்சிப் பற்றியோ, எங்கள் இருவரை பற்றியோ இனி யாருமே தவறாக பேச வேண்டாம். யாருக்குமே எதுவுமே தெரியாது. உண்மை தெரியாமல் எல்லோரும் நிறைய பேச வேண்டாம்.
என் அப்பா அம்மாவிற்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது. அவர்களை தண்டிக்க வேண்டும் என நினைப்பது தவறு. அவர்களை விட்டுவிடுங்கள்.
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். எங்களுக்கு காதலை வீட்டில் சொல்ல நேரம் தேவைப்பட்டது. கடந்த மே 30ஆம் தேதி கவினும், சுர்ஜித்தும் பேசிக்கொண்டார்கள். அதன்பின்னர் அப்பாவிடம் சுர்ஜித் இதை தெரிவித்தான். அப்போது இதுகுறித்து அப்பா என்னிடம் கேட்டபோது, “இல்லை நான் காதலிக்கவில்லை என்று கூறிவிட்டேன். ஏனென்றால், இன்னும் 6 மாதம் கழித்து நமது காதலை சொல்லு என நேரம் கேட்டிருந்தான். அதனால் அப்பாவிடம் அன்றைக்கு சொல்லவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் இப்படி ஆகிவிட்டது. அவர்கள் இருவருக்கு இடையே என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.
இதற்கிடையே கவினுக்கு போன் பண்ணி, நீங்க பொண்ணு பார்க்க வாங்க… அக்காவின் கல்யாணம் முடிந்தால் தான், அடுத்து நான் என்னுடைய வேலையை பார்க்க முடியும் என சுர்ஜித் கூறியது எனக்கு தெரியும்.
அதன்பிறகு ஜூலை 28ஆம் தேதி நான் கவினை வர சொல்லியிருந்தேன். ஆனால் 27ஆம் தேதியே கவின் அவனது தாத்தாவுடன் எனது மருத்துவமனைக்கு வந்திருந்தான். நான் கவினின் அம்மா மற்றும் மாமாவுடன் மட்டும் தான் அப்போது சிகிச்சைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், அவன் வெளியே சென்றுவிட்டான்.
அங்கிருந்து அவனுடைய அம்மாவும், மாமாவும் கிளம்பும் போது தான், கவின் எங்கே என்று யோசிக்க ஆரம்பித்தோம். நாங்கள் போன் பண்ணி பார்த்தோம். எடுக்கவில்லை. அதன்பின்னர் தான் அவன் கொலை செய்யப்பட்டது எங்களுக்கு தெரிந்தது.
இத்தருணத்தில் எல்லாரும் என்னென்ன தோன்றியதோ அதையெல்லாம் பேசி விட்டீர்கள். போதும் விட்டு விடுங்கள் வீண் வதந்தியை பரப்பாதீர்கள்” என சுபாஷினி தெரிவித்துள்ளார்.