இந்தியாவிற்கு வந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விண்வெளி நிலையத்திற்குச் செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபூ, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் ’ஆக்சியம் 4 ’திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் ஜூன் 25-ந் தேதி அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு டிராகன் விண்கலம் மூலம் புறப்பட்டனர்.
அங்குள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த குழுவினர் பயிர் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஜூலை 15 ந்தேதி ஆக்சியம் 4 குழுவினரை ஏற்றி சென்ற டிராகன் விண்கலம் சாண்டியாகோ கடற்கரை அருகே பசுபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதைத்தொடர்ந்து சுபான்ஷு சுக்லா இன்று அதிகாலை இந்தியாவிற்கு வந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு வந்த சுக்லாவை மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, இஸ்ரோ தலைவர் நாராயணன், சுபான்ஷு மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில் சுபான்ஷு சுக்லாவை வரவேற்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம். இஸ்ரோவிற்கு பெருமை சேர்க்கும் தருணம். பிரதமர் மோடி தலைமையில் இதற்கு வழிவகுத்த நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் தருணம்.” என குறிப்பிட்டுள்ளார்.