நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநரிடம் பட்டம் வாங்க மாணவி மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32 ஆவது பட்டமளிப்பு விழா இன்று (ஆகஸ்ட் 13) காலை நடைபெற்றது. பல்கலை கழகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடந்த இந்த விழாவில் 759 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். தமிழக ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திர சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் மாணவ மாணவிகள் தங்கள் பட்டத்துடன் மேடைக்கு வந்து ஆளுநரிடம் காட்டி புகைப்படம் எடுத்து சென்றனர்.
அப்போது ஆராய்ச்சிக்காக பட்டம் பெற்ற நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ராஜன் என்ற மாணவி ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டத்தை காட்டாமல், அவருக்கு அடுத்தபடியாக துணை வேந்தர் சந்திர சேகரிடம் காட்டி புகைப்படம் எடுத்துச் சென்றார். இந்த சம்பவம் ஆளுநர் உள்ளிட்ட மேடையிலிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீன் ராஜன், “ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் இருந்து பட்டம் பெற விரும்பவில்லை. யாரிடமிருந்து பட்டம் வாங்குவது என நான் தான் முடிவு செய்ய வேண்டும்.
மேடையில் இருந்தவர்கள் ஆளுநருக்கு கையில் கொடுத்து வாங்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்துவிட்டேன்” என்றார்.
மேலும் அவர், “நான் எம்பிஏ, பி.ஹெச்டி முடித்திருக்கிறேன். நாகர்கோயிலில் உள்ள நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி செய்து வருகிறேன். நான் திராவிட மாடலை பின்பற்றுகிறேன்.
எனக்கு பின்னணியில் யாரும் இல்லை. என்னை போலவே இங்கு பல பேருக்கும் ஆளுநரிடம் பட்டம் வாங்குவதற்கு விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
நம்முடைய தமிழ்நாட்டில் உயரதிகாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ்நாடு முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பட்டம் கொடுக்க தகுதி உள்ளது.
மேடை நாகரிகத்தை மீறி நான் எதுவும் செய்யவில்லை” என்றார்.
இந்த விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.