ராமேஸ்வரத்தில் பயங்கரம்.. காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி படுகொலை

Published On:

| By Pandeeswari Gurusamy

Student murdered for refusing to fall in love

ராமேஸ்வரம் அருகே காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மாரியப்பனின் 17 வயது மகள் ஷாலினி. இவர் அதே பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

ADVERTISEMENT

அப்பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற இளைஞர் ஷாலினியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ஷாலினி தொடர்ச்சியாக காதலை ஏற்க மறுத்துள்ளார். மேலும் முனிராஜ் குறித்து தனது தந்தை மாரியப்பனிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மாரியப்பன் முனிராஜ் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் இன்று (நவம்பர் 19) காலை மாணவி ஷாலினி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முனிராஜ் தன்னை காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாணவி ஷாலினி, முனிராஜ் காதலை ஏற்க திட்ட வட்டமாக மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து முனிராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். இச்சம்பவம்குறித்து தகவலறிந்து வந்த துறைமுகம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மாணவியை கத்தியால் குத்திய முனிராஜை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் மதுரை தனுஷ்கோடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் உடலை துறைமுகம் மருத்துமனையில் வைத்தே பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட முனிராஜ்க்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு? பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம்.

மு.க ஸ்டாலின்- “உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?” என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா? ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share