விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த 11 ஆம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததற்கு மாரடைப்பே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேல தெருவை சார்ந்த மகேஸ்வரியின் இரண்டாவது மகன் மோகன் ராஜ் 11ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
அவர் இன்று (ஆகஸ்ட் 13) காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவன் காலை 7 மணிக்கு நடக்கும் சிறப்பு வகுப்பில் பங்கேற்க மூன்றாவது மாடியில் உள்ள பள்ளி வகுப்பறைக்கு சென்றார். அங்கு முதல் இருக்கையில் அமர்ந்த மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.
இதனையடுத்து அருகிலிருந்த மாணவர்கள் மயங்கி விழுந்த மோகன் ராஜை எழுப்பி அமர வைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவனை நான்குமுனை சந்திப்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மாணவனின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளி மாணவனின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் மரணத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பள்ளி மாணவன் வகுப்பில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தினர் மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை மாணவன் மயங்கி விழுந்தையடுத்து மருத்துவமனையில் அனுமதித்தபோது உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பிரேத பரிசோதனையை தொடர்ந்து வெளியான தகவலின் படி, மாணவர் மோகன்ராஜ் உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் 18 வயதிற்குட்பட்ட சிறுவன் என்பதால் மாரடைப்பு தொடர்பான எந்த அறிகுறியும் தென்பட்டிருக்காது என மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.