திருவள்ளூர் பகுதியில் ஆதார் அட்டை இல்லாததால் நரிக்குறவர் சமுதாய மாணவரை அரசு பள்ளியில் சேர்க்க மறுத்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவனை பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு இல்லாத காரணத்தால் அரசு பள்ளியில் சேர்க்க திமுக அரசு மறுத்துள்ளது. இது சமீபத்தில் வெளியிடப்பட்ட மாநில கல்விக் கொள்கையின் ஒரு பகுதியா என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் அந்த மாணவன் தனது பெற்றோருடன் ரோட்டில் உட்காந்து இருப்பது போன்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவரின் சேர்க்கை நீக்க பதிவேடு, வருகை பதிவேடையும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில்,”வீடியோவில் இடம் பெற்ற மாணவன் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள திருவள்ளுவர் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2023-ல் இருந்து பயின்று வருகிறார். பள்ளியில் சேர்க்க மறுத்ததாக கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது. 11.8.25 அன்று அவரது பெற்றோர் ஆதார் அட்டை எடுப்பதாக கூறி மாணவனை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்.
ஆதார் அட்டை எடுப்பதில் உண்டான காலதாமதத்தால் தாசில்தார் அலுவலகத்தில் வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், மாணவனை பள்ளியில் சேர்க்கவில்லை என்று வதந்தி பரப்பி வருகிறார்கள். அந்த மாணவனுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் ஆதார் அட்டை எடுப்பதில் சிக்கல் இருந்துள்ளது.
ஒரு வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற வருவாய் கோட்டாட்சியரை அணுக வேண்டும். அது குறித்த வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த மாணவனுக்கு கோட்டாட்சியரால் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அனைத்து பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. வதந்திகளை பரப்பாதீர்கள்.” என கூறப்பட்டுள்ளது.