இணையத்தில் தினம்தோறும் எதேனும் ஒரு விவகாரமோ, நிகழ்வோ ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. Stray dog attack in trending village Koomapatti
இன்று (ஜூன் 24) ஆக்சியம் 4 திட்டத்தின் கீழ் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா ட்ரெண்டிங்கில் இருக்கும் அதே வேளையில் தென் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி கிராமமும் இன்ஸ்டாகிராம், யூடியூப் சார்ட்ஸ்களை ஆக்கிரமித்துள்ளது.
“ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி இருக்குங்க.. கூமாபட்டி தனி ஐலேண்டு” என ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
கூமாப்பட்டி காஷ்மீர் போல் இருக்கும் என மற்றொரு வீடியோவும் வெளியிட்டிருந்தார்.
dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில் இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் பார்ப்பதற்கு, சுற்றியும் மலைகள், நடுவே ஏரி என ரம்மியமாகவும் இருக்கிறது.
அந்த வீடியோவில் பேசும் இளைஞர் கூமாபட்டி எங்கிருக்கிறது என்று சொல்லவில்லை. அதனால் இணையவாசிகள் கூமாப்பட்டி எங்கிருக்கிறது என்றும் கேட்டு வருகின்றனர்.
மேலும் சிலர் ஒரே வீடியோவில் கிராமத்தையே டெவலப் பன்னிட்டிங்க… இஸ்ரேல் கூமாபட்டி மேல் போர் தொடுக்கபோகிறது… நாங்கள் அடுத்த மாதம் கூமாபட்டிக்கு வருகிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
சரி, கூமாபட்டி எங்கிருக்கிறது?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ளது கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது.
பிளவக்கல் அணையும் இங்குதான் உள்ளது. 2002ஆம் ஆண்டு கட்டப்பட்ட அணையாகும். இங்கு படகு சவாரியும், குழந்தைகள் பூங்காவும் உள்ளது.
கூமாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலில் வழிபட்டுத்தான் அந்த பகுதி மக்கள் விவசாய பணிகளை தொடங்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டி தேர் திருவிழாவும் நடத்துகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளது.
கூமாபட்டிக்கு வந்த சோகம்…
இப்படி கூமாபட்டி ட்ரெண்டாகும் நிலையில், அங்கு வெறிநாய்த் தொல்லை இருப்பதாக அந்த பகுதிமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களில் வெறிநாய் ஒன்று கடித்து 30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு எதிராக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் செவ்வாய் கிழமை இரவுக்குள் வெறிநாய் பிடிக்கப்படும் என்று உறுதியளித்ததால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து நேற்றிரவு அந்த நாயை உள்ளாட்சி நிர்வாகத்தினர் பிடித்துள்ளனர்.
தற்போது இணையத்தில் பரவும் வீடியோவையும், நாய்கடி செய்தியையும் குறிப்பிட்டும் இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். Stray dog attack in trending village Koomapatti