வங்கதேசத்தில் மாணவர் அமைப்பு தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்திய துணை தூதரகம் மற்றும் தூதர் வீடுகளில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் வீதியில் திரண்டதால் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் இயக்கத்தினர் பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுதது நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையில் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் இயக்கத்தின் தலைவரான ஷெரிப் உஸ்மான் ஹாதி மீது கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் ஹாதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஹாதிக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறியதாக குற்றம் சாட்டி மாணவர் இயக்கத்தின் போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வங்கதேசத்தின் பிரபல புரோதோம் அலோ மற்றும் டெய்லி ஸ்டார் ஆகிய பத்திரிக்கை அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
நள்ளிரவில் சட்டோகிராம் பகுதியில் உள்ள இந்திய துணை தூதரகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்ற நிலையில் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தனர். இதைத்தொடர்ந்து இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இந்திய துணை தூதரின் வீட்டின் மீதும் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
போராட்டத்தின் போது இந்தியாவிற்கு எதிராகவும் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் வங்கதேசத்தில் வாழும் இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
முன்னதாக உஸ்மான் ஹாதியை சுட்ட மர்ம நபர்களை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 42 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என வங்கதேச போலீசார் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
