இரு தரப்பினர் இடையே நிலப் பிரச்னையில் உள்ள கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே பெருமாள் கோயில்பட்டி என்ற ஊரில் மண்டு கருப்பணசாமி கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்கு வெளியே உள்ள காலி இடத்திற்காக கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் இடையே நீண்ட வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில் இக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று இந்து சமுதாய மக்களின் சார்பில் அந்த ஊரைச் சேர்ந்த சித்திர பால்ராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மண்டு கருப்பணசாமி கோயிலில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் தீபம் ஏற்றக்கூடாது என்று கிறிஸ்துவ சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் பெருமாள் கோயில்பட்டி கிராமத்திற்கு மட்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மனுதாரர் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதிப் ஆகியோர் நேரில் ஆஜராக தனி நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி இருவரும் நேரில் ஆஜராகி அந்த ஊரில் நிலவும் பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
“அப்பகுதியில் பிரச்னை எழும் சூழல் இருப்பதால் நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ள வேண்டும்” என அரசுத் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “உத்தரவை நிறைவேற்ற முடியுமா? இல்லையா? என்பதற்கு நேரடியாக பதில் அளியுங்கள்” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசு தரப்பில், “அரசுத்தரப்புக்கு எந்த சார்பும் இல்லை, மத நல்லிணக்கமும், அமைதியுமே முக்கியம். மேல்முறையீடு செய்யக்கூட நேரம் வழங்காமல் அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கால அவகாசம் கொடுக்காமல் இவ்வாறு செய்வது ஏற்புடையது அல்ல” என தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில் தொடர்ந்து பதிலளிக்க முயன்ற போது, ”சத்தத்தைக் கூட்டாதீர்கள்” என நீதிபதி கண்டிக்க, ”சட்டத்திற்கு உட்பட்டு எங்களது கருத்துகளை வைக்க இடமுண்டு” என அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில், ‘தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கோயில் இடத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டுதான் தனி நீதிபதியின் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. மாவட்ட நிர்வாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கவனமாக இருக்க வேண்டும். அங்குள்ள பிரச்சினை முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இதை கேட்ட நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் தடை விதித்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக இரு தரப்பும் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
கிட்டத்திட்ட திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் போலவே நடந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர்தான் இன்று (டிசம்பர் 19) மண்டு கருப்பணசாமி கோயில் வழக்கில் உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
