ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து (Statehood for Jammu & Kashmir) வழங்கும் அறிவிப்பு இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி வெளியாகக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 5-ந் தேதிதான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது; ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், சட்டமன்றத்தைக் கொண்டதாகவும் லடாக் யூனியன் பிரதேசம் சட்டமன்றம் இல்லாமல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முழு அளவில் அரசியல் செயல்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின் போது, மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற உறுதி மொழியை பாஜக உள்ளிட்ட கட்சிகள் வழங்கின.
இந்த நிலையில் டெல்லியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற முக்கிய சந்திப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான அறிவிப்பு ஆகஸ்ட் 5-ந் தேதியான இன்று வெளியாகலாம் என்றும் தகவல்கள் பரவுகின்றன.
டெல்லியில் ஆகஸ்ட் 4-ந் தேதியன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அடுத்தடுத்து சந்தித்து பேசினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர், IB தலைவர் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். மூத்த கேபினட் அமைச்சர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனியே ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறக் கூடும் என்கின்றனர் பாஜக தலைவர்கள்.
இத்தகைய சந்திப்புகள்தான் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு இன்று வெளியாகிறதா? என்ற கேள்விகளை எழுப்பி உள்ளன. ஆனால், ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, டெல்லி தலைவர்கள் யாரும் என்னுடன் பேசவில்லை; அப்படி எல்லாம் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து அறிவிப்பு உடனே வெளியாகாது என கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள இல்ஜிதா முப்தி, ஆகஸ்ட் 5-ந் தேதி மிகப் பெரிய ‘சம்பவம்’ நிகழப் போவதாக தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் தலைநகர் டெல்லியிலும் ஜம்மு காஷ்மீரிலும் பரபரப்பு நிலவுகிறது.