தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (மார்ச் 31) மாலை திருவாரூரில் தொடங்கினார்.
திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “2026 சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டேன். நேற்று கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு கொளத்தூர் தொகுதியில் எனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தேன். இன்று கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கான பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன்.
திமுக ஊர்
திருவாரூர் என்றால் அது திமுகவின் ஊர். அதனால்தான் இங்கிருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன்” என்றார்.மேலும், “இங்கு மேடையில் இருக்கும் இவர்கள், உங்கள் நன்மதிப்புகளை வாக்குகளாகப் பெற்று 17வது சட்டப்பேரவைக்குள் நுழையப் போகும் வேட்பாளர்கள்.
திருவாரூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, திருவாரூர் மக்களுடைய ஒவ்வொரு வீட்டிலும் நன்றாக அறிமுகமான, இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினராக இருக்கும் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் களமிறங்குகிறார்.
கலைஞர் மறைந்த பிறகு கலைவாணன் அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறையும் பூண்டி கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
இதேபோல் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் கூட்டணியின் பலமாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொதுவுடைமை இயக்கத்தின் போராளியான மாரிமுத்து களமிறங்குகிறார். அவர் “களத்திலும் மட்டுமல்ல, கடந்த முறை சட்டமன்றத்திலும் சிறப்பாகச் செயல்பட்டவர் . அப்படிப்பட்ட நமது தோழர் மாரிமுத்துவுக்கு திருத்துறைப்பூண்டி மக்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் களமிறங்குகிறார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். நம்மில் ஒருவர். களத்தில் அவருக்காக கடுமையாக பாடுபட்டு வெற்றி பெற வைக்க வேண்டியது திமுகவினரின் கடமை. அவருக்கு நன்னிலம் மக்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கலைஞரின் மகன்
மேலும் பேசிய முதல்வர், “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நான் இந்த மண்ணின் மைந்தன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தலைவர் கலைஞரின் மகன். உங்களால் உருவாக்கப்பட்ட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அன்போடும் உரிமையோடும் கேட்கிறேன்… வெற்றி உறுதியா?” என்று கூட்டத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார் முதல்வர் ஸ்டாலின்.மேலும், “இந்த நான்கு பேருக்கும் நீங்கள் தரப் போகும் வெற்றி உறுதியா?” என்று கூட்டத்தினரைப் பார்த்து மீண்டும் கேள்வி எழுப்பினார்.இதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் “உறுதி” என்று முழக்கமிட்டனர்.இதைத் தொடர்ந்து, வேட்பாளர்களைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின், “வெற்றி உறுதியாகிவிட்டது. நீங்கள் சீட்டில் உட்காரலாம்” என்று தெரிவித்தார்.
