வார்த்தைக்கு வார்த்தை ஓபிஎஸ்… நிதிஷ் குமார் நிலைமைதான் பழனிசாமிக்கு : மதுரையில் ஸ்டாலின் பேச்சு!

Published On:

| By Kavi

விசுவாசத்துக்கு ஓ.பி.எஸ். என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர்தான் பழனிசாமி என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

மதுரை திருமங்கலம் ராயபாளையத்தில் இன்று (மார்ச் 7) முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

சகோதரர் ஓபிஎஸ்… 

ADVERTISEMENT

இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். 

அவர் பேசுகையில், “ இந்த மேடை, மிக வித்தியாசமான மேடை! சில காலத்திற்கு முன்பு வரை, நம்முடைய அன்பிற்குரிய சகோதரர் ஓ.பி.எஸ். இந்த மேடையில் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்! ஆனால், லேட்டாக இருந்தாலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருந்த தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்குதான் திரும்பி இருக்கிறார்! அவரையும், அவருடன், நம்முடைய இயக்கத்திற்குத் திரும்பியிருக்கும் உடன்பிறப்புகளையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் மனமுவந்து வரவேற்கிறேன்!

ADVERTISEMENT

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நீங்கள் மட்டுமல்ல; நானும் ரசிகன்தான்! கழகம் எம்.ஜி.ஆரை வளர்த்தது! அவரும் கழகத்தை வளர்த்தார்! கலைஞரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார்! அப்படிப்பட்ட தாய்க்கழகத்திற்கு – தாயின் மடிக்கு நீங்கள் எல்லாம் திரும்பி இருக்கிறீர்கள்!

 எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க., யாருக்கோ அடிமை சேவகம் செய்யப்போனதால், உரிமைக்குரல் எழுப்பித் தாய்க்கழகத்திற்குத் திரும்பி இருக்கிறீர்கள்! தடம் மாறாமல், திராவிடப் பாதையில் பயணத்தை தொடரும் உங்களை எல்லாம் நான் வருக… வருக… வருக என்று வரவேற்கிறேன்!

அண்ணாவின் பெயரைத் தாங்கியுள்ள இயக்கம், அவரையும் – அவரது கொள்கைகளையும் மறந்து, துரோகத்தின் முழு உருவம் ஆனதால், அண்ணா தொடங்கிய இயக்கத்திற்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள்! சுயமரியாதையின் கோட்டையான அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். அண்ணாவின் தம்பியாக – கலைஞரின் உடன்பிறப்பாக – உங்களை எல்லாம் வருக! வருக! என்று மீண்டும் மீண்டும் வரவேற்கிறேன்.

நம்முடைய ஓ.பி.எஸ். அவர்களை இந்த மேடையில் பார்க்கும்போது, எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது.

பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம்

2008-இல், தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, நம்முடைய ஓ.பி.எஸ். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தார். அப்போது, நவம்பர் 11-ஆம் தேதி, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, சட்டமன்றத்தில் நடந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், நம்முடைய ஓ.பி.எஸ். பேசினார். மறுநாள் காலையில், முரசொலியில் என்ன ஹெட்லைன்ஸ் போட்டார்கள் தெரியுமா? “பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம்” என்று குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டார்கள். ந

ம்முடைய ஓ.பி.எஸ்-உம் முரசொலி செய்தியைக் குறிப்பிட்டு, அவையில் பேசினார். உடனே தலைவர் கலைஞர் என்ன சொன்னார் என்றால், “பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம் அதற்காகக் கவலைப்படக் கூடாது. பச்சைத்தமிழர் என்று தந்தை பெரியார் காமராசருக்குப் பட்டமே கொடுத்திருக்கிறார். அதைத்தான் முரசொலி கொடுத்திருக்கிறது. அதுவும் முரசு அடித்துக் கொடுத்திருக்கிறது” என்று கலைஞர் சொன்னார். இப்படி தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

சட்டமன்றத்தில் ஸ்டாலினை பார்த்து சிரித்த ஓபிஎஸ்

ஓ.பி.எஸ்-ன் ஸ்பெஷாலிட்டி என்ன என்று கேட்டால், எப்போதும் சிரித்த முகமாகத்தான் இருப்பார். இப்போதுகூட பாருங்கள்… அதுதான் அவருடைய பண்பு! பொதுவாக, ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டால்தான் பிரச்சினை ஆகும்; ஆனால், நம்முடைய ஓ.பி.எஸ். அவர்களுக்கு அவருடைய சிரிப்பே ஒருகாலத்தில் பிரச்சினை ஆகிவிட்டது! ஒருமுறை அவர் என்னைப் பார்த்து சட்டமன்றத்தில் சிரித்துவிட்டார்.

உடனே, ஸ்டாலினைப் பார்த்து ஓ.பி.எஸ். சிரித்துவிட்டார் என்று, ஏதோ, இரண்டு நாட்டுக்குள்ளே போர் வந்த மாதிரி பிரச்சினையாக ஆக்கிவிட்டார்கள்! அரசியலில், ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்; ஆனால், சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும்போது, நலம் விசாரித்துக் கொள்வது அரசியல் மாண்பு; அதுதான் பண்பாடு! அப்படித்தான், அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். அவர்களைப் பார்த்து, மரியாதைக்காக வணக்கம் வைத்தேன். அவரும் சிரித்தார். உடனே இதைக் குற்றச்சாட்டாக ஆக்கிவிட்டார்கள். ஆனால், யார் என்ன சொன்னாலும், தன்னுடைய பண்பை மாற்றிக் கொள்ளாமல், அமைதியுடனும், அன்புடனும், அதே சிரித்த முகத்துடனும் இன்றைக்கும் இருக்கிறார் நம்முடைய ஓ.பி.எஸ்..

ஓபிஎஸ் என்றால் விசுவாசம்

அமைதியும் – புன்னகையும் மட்டுமல்ல, ஓ.பி.எஸ். என்று சொன்னால், ஞாபகத்திற்கு வருகின்ற ஒரே சொல், “விசுவாசம்!” மறைந்த ஜெயலலிதா, தான் அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில், நம்முடைய ஓ.பி.எஸ். -ஐ இரண்டு முறை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைத்த அரசாட்சியை, எந்தத் துரோகமும் இல்லாமல், திருப்பி ஒப்படைத்த நேர்மைக்குச் சொந்தக்காரர்தான் ஓ.பி.எஸ்.! அதனால்தான், ஜெயலலிதாவே, சகோதரர் ஓ.பி.எஸ். -ஐ பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.

விசுவாசத்துக்கு ஒரு ஓ.பி.எஸ். என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர்தான் பழனிசாமி. கூவத்தூரில், அம்மையார் சசிகலா காலில் ஊர்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சராகிவிட்டு, அந்த அம்மையாரை நோக்கியே, “நீ எனக்குப் பதவி பெற்று தந்தாயா?” என்று ஒருமையில் கேட்டவர்தான் பழனிசாமி. அவர் இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று நம்முடைய சகோதரர் ஓ.பி.எஸ். அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!

பழனிசாமியை பொறுத்தவரைக்கும், தன்னை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வார். அவருடைய உச்சகட்ட துரோகம் என்ன தெரியுமா? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்திருக்கிறார் பழனிசாமி.

நிதிஷ்குமார் மாதிரிதான் பழனிசாமிக்கு

பழனிசாமி என்ன நினைக்கிறார் என்றால், பா.ஜ.க. தனக்கு நல்லது செய்யும் என்று நினைக்கிறார். உண்மையில், பா.ஜ.க. யாருக்கும் நல்லது செய்யாது! இன்றைக்குக் கூட செய்திகளில் பார்த்திருப்பீர்கள்… நாளைக்கு மகளிர் தினத்தை அடிப்படையாக வைத்து, இன்றைக்கு சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி, மகளிருக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்கள்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நூறு ரூபாய் குறைத்தது தேர்தலுக்கான பம்மாத்து என்று நிரூபித்திருக்கிறார் பிரதமர் மோடி ! 2024-இல் கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கிறேன் என்றும், நூறு ரூபாய் குறைக்கிறேன் என்றும் சொன்னவர், இன்றைக்கு எதற்குச் சுமையை ஏற்றியிருக்கிறார்? வார்த்தைக்கு வார்த்தை ‘நாரி சக்தி’ என்று சொன்னவர்களுக்கு, இன்றைக்கு அந்தப் பெண் சக்தி கண்ணிற்குத் தெரியவில்லையா? பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகச் சொல்லிவிட்டு, வாக்குத் திருட்டு மாதிரி, அவர்களுடைய பணத்தையும் பறிப்பது நியாயமா? 2024-இல் பெண்களின் நல்வாழ்வுக்குக் காண்பித்த அக்கறை, 2026-இல் எங்கே சென்றது?

பா.ஜ.க.வைப் பொறுத்தவரைக்கும், மக்களுக்கு நல்லது செய்ய விடமாட்டார்கள். இதை உணர்ந்ததால்தான், எலக்‌ஷனைக் காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகையை முடக்க நினைத்த சதியை முறியடித்து, மூன்று மாதங்களுக்கான உரிமைத்தொகையை முன்பணமாகவும், இரண்டாயிரம் ரூபாயை கோடைக்காலச் சிறப்பு நிதியாகவும் சேர்த்து, ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு, ஐந்தாயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, திராவிட மாடல் 2.0-வில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்துவோம் என்றும் அறிவித்திருக்கிறேன்.

மக்களுக்காக பார்த்துப் பார்த்து திட்டங்களைத் தீட்டி, நன்மைகள் செய்து, மக்களுக்கு கொடுத்தால், அதுதான், தி.மு.க.! மக்களைப் பற்றிக் கவலப்படாமல், மக்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தால், அது பா.ஜ.க.! இப்படி, யாருக்குமே நன்மை செய்யாத பா.ஜ.க.வா, அ.தி.மு.க.வுக்கு நன்மை செய்யப் போகிறது? அ.தி.மு.க.வின் இரத்தத்தைத்தான் உறிஞ்சி எடுக்கும். அதுதான் நடக்கப் போகிறது!

இதில், பழனிசாமிக்கு ஏதாவது ‘டவுட்’ இருந்தால், இதற்காகவாவது அவர் கொஞ்சம் தலையைத் தூக்கி, பீகாரில் நடப்பதைப் பார்க்க வேண்டும். பத்து முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரையே பா.ஜ.க. பந்தாடிவிட்டது. பீகாரில், நிதிஷ்குமாருடைய ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் நடக்கும் “N.D.A.” ஆட்சியில், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, இன்றைக்கு மாநிலங்களவை எம்.பி. ஆகப்போகிறார். இத்தனைக்கும், கடந்த நவம்பர் மாதம்தான் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆனார். அதற்குள்ளாக அவர் பதவி விலகுகிறார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. நிதிஷ்குமாருக்கு பதிலாக, பா.ஜ.க. சார்பில், புதிய முதலமைச்சர் பொறுப்பேற்க இருப்பதாகத் தகவல்கள் ஆதாரத்துடன் வருகிறது.

இன்றைக்கு நிதிஷ்குமார் ஏற்பட்டிருக்கும் கதிதான், நாளைக்குப் பழனிசாமி அவர்களுக்கும்! “அதற்கு அவர் முதலில் வெற்றி பெற வேண்டுமே” என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது… எனக்குக் கிடைத்த தகவல்படி, அ.தி.மு.க.வில் பழனிசாமிக்கு பதிலாக ஆல்-ரெடி வேறு ஒருவரைப் பொதுச்செயலாளராக பா.ஜ.க. தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது! பழனிசாமி அவர்களை இந்தத் தேர்தல் வரைக்கும்தான் பா.ஜ.க. வைத்திருக்கும். பிறகு, அவரையே தூக்கிவிடுவார்கள். அதுதான் நடக்கப் போகிறது. ஒருவேளை, பா.ஜ.க. கூட கூட்டணி வைக்க மறுத்திருந்தால், இப்போதே மாற்றி இருப்பார்கள். அந்தளவுக்கு, அ.தி.மு.க. பா.ஜ.க-வின் கண்ட்ரோலுக்கு போய்விட்டது! அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குகளை வாங்கி, தன்னை வளர்த்துக் கொள்ள பா.ஜ.க. போட்டிருக்கும் திட்டத்திற்கு, துணை போய்க் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

N.D.A. சார்பில், இப்போது நடைபெறும் தேர்தலுக்கான கூட்டங்களைப் பார்க்கிறீர்கள். அதை கவனித்தீர்கள் என்றால், உங்களுக்கே நன்றாகப் புரியும். அ.தி.மு.க. கூட்டணி என்று சொல்ல மாட்டார்கள்; N.D.A. கூட்டணி என்றுதான் சொல்வார்கள். ஏன், பிரதமர் மோடியே அ.தி.மு.க. பெயரையே சொல்லமாட்டார். இரண்டு விரல் காட்டும் படத்தைகூட மாற்றிவிடுவார்கள். இந்தப் பேட்டர்னை எல்லாம் கவனித்தால், மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்தது போன்று, பீகாரில், நிதிஷ்குமாருக்கு நடப்பது போன்றுதான், தமிழ்நாட்டில் பழனிசாமிக்கும் நடக்கப் போகிறது. இதையெல்லாம் முன்கூட்டியே சரியாக கணித்த காரணத்தினால்தான், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாதையில், உண்மையான திராவிட இயக்கத்துக்குத் திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்து, அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்கள் எல்லாம், தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் மட்டுமல்ல, இன்னும் ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தென் மாவட்டங்களுக்கு செய்தது என்ன?

தென்மாவட்டங்களில் போதுமான அளவு வளர்ச்சி இல்லை என்று பொதுவாக இங்கே இருக்கும் மக்களிடம் ஒரு குறை இருக்கும். கடந்த 5 ஆண்டுகளில், அந்த நிலையை மொத்தமாக நாம் மாற்றியிருக்கிறோம். இன்றைக்குக் கூட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டேன். “மதுரைக்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், சிறப்பு உட்கட்டமைப்புத் திட்டங்களை நம்முடைய ஆட்சியில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்” என்று ஒரு பெரிய நம்பரைச் சொன்னார். “மதுரையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடையும் மக்கள் இருக்கிறார்கள்” என்று சொன்னார்.

அறிவு வளர்ச்சிக்காக கலைஞர் நூற்றாண்டு நூலகம்,

ஜல்லிக்கட்டுக்காகக் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்,

தமிழர் தொன்மையின் அடையாளமாக இருக்கும் மதுரை கீழடி மற்றும் நெல்லை பொருநை அருங்காட்சியகங்கள்,

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்,

சமீபத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்,

இதே திருமங்கலத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலம் என்று, உங்களின் நீண்டகால கோரிக்கை எல்லாம் நிறைவேறி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், கோயில் நகரமாக இருக்கும் மதுரை, I.T. செக்டாரிலும் வளர்ச்சி காண, தென் மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக மாட்டுத்தாவணியில், மிகப் பெரிய ‘டைடல் பார்க்’ சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

கடந்த மாதம் கூட நான் மதுரைக்கு வந்தேன். 11 இலட்சம் மக்கள் பயனடையக் கூட்டுக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

எல்காட் நிறுவன கட்டடம்,

வண்டியூர் புதுப்பிக்கப்பட்ட பூங்கா எனப் பல திட்டங்களை திறந்து வைத்திருக்கிறோம்.

மதுரையில், கடந்த டிசம்பர் மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி, 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை உறுதி செய்திருக்கிறோம்.

நெல்லையில், டாடா சோலார் நிறுவனத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.

முத்து நகரான தூத்துக்குடியில், நியோ டைடல் பூங்காவும் திறந்து வைத்திருக்கிறேன்.

பெருமையோடு சொல்வேன்… இப்படி இன்னும் நிறைய பணிகளைத் தென்மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகச் செய்திருக்கிறோம். அவ்வளவு பெரிய லிஸ்ட் என்னிடம் இருக்கிறது. அடுத்து நாம்தான் இன்னும் செய்யப் போகிறோம்.

கடந்த வாரம் பிரதமர் மோடி, மதுரை வந்தாரே… அவரால், இதுபோன்று ஏதாவது சொல்ல முடிந்ததா? 5 ஆண்களில், நாம் இத்தனை பெரிய திட்டங்களை முடித்திருக்கிறோம். அறிவித்து 10 ஆண்டு ஆகியும், பா.ஜ.க. அரசு இதுவரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை கட்டி முடிக்கவில்லை. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம்! இதுதான் திராவிட மாடலுக்கும், அவர்களுடைய டப்பா எஞ்சின் மாடலுக்கும் இருக்கும் வித்தியாசம்!

எய்ம்ஸ் கட்டுவதற்குத் தாமதம் மட்டுமல்ல, இதே மதுரையில், மெட்ரோ இரயிலும் வரவிடாமல் தடுக்கின்ற ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இருக்கிறது. இப்படி எந்தச் சாதனையும் செய்யாமல் இருக்கும் காரணத்தினால்தான், தி.மு.க. கூட்டணியில், ஏதாவது குழப்பம் ஏற்படாதா… அதில் குளிர்காயலாமா என்று இவர்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். நம்முடைய கொள்கைக் கூட்டணி அதற்கும் இடம் கொடுக்காமல், தொடர்ந்து நான்காவது பொதுத் தேர்தலை சந்திப்பதற்குத் தயாராகிவிட்டது. அதனால்தான், நான் அறிவாலயத்திலிருந்து காங்கிரஸ் கட்சியின் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து காரில் ஏறுகிறபோது, அறிவாலயத்தில் வெளியில் நின்று கொண்டிருந்த பத்திரிகை நண்பர்கள் என்னைப் பார்த்து, என்னானது? என்னானது? என்று கேட்டபோது, நான் வேண்டுமென்றோ, திட்டமிட்டோ சொல்லவில்லை. நான் கையைக் காண்பித்து “முடிந்துவிட்டது” என்று சொன்னேன் அவ்வளவுதான். அது வைரலாகிவிட்டது. இது கொள்கைக் கூட்டணி மட்டுமல்ல, மக்கள் மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கும் வெற்றிக் கூட்டணி!

தமிழ்நாட்டில், மதக் கலவரமும், மக்களிடையே மோதலும் நடக்காமல் பாதுகாத்து, வளர்ச்சியில் மட்டுமே ஃபோக்கஸ் செய்யும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! அதை உணர்ந்துதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பலரும், தொடர்ந்து நம்முடைய கூட்டணியில் இணைந்துள்ளனர். 2021 தேர்தலின்போது இருந்ததைவிட, நாம் இப்போது கூடுதலாக பலம் பெற்றிருக்கிறோம். சாதனைகள், கொள்கை உறுதி, கூட்டணி வலிமை என்று மூன்றிலும் ‘சென்டம்’ ஸ்கோர் செய்திருக்கிறோம். அதனால்தான், ‘வெல்வோம் 200’ என்று என்னால் தைரியமாகச் சொல்ல முடிகிறது.

நான் உறுதியாக சொல்கிறேன்… வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று, மீண்டும் நாம் ஆட்சி அமைப்போம்!

இன்னும் சொன்னால், தி.மு.க.தான் வெற்றி பெறப் போகிறது என்று பா.ஜ.க.வே நினைக்கிறது. அதனால்தான், நம்முடைய பிரச்சார பீரங்கியாக இருந்த ஆளுநர் ரவியை திடீர் என்று மாற்றிவிட்டார்கள். ஸ்டாலினுக்கு மறுபடியும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே என்று விரக்தியில், அவர் கிளம்பிவிட்டார்…

ஆளுநர் பிரச்சார பீரங்கி

ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கேட்கிறேன்… எலக்‌ஷன் முடியும் வரைக்கும், ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என்று நான் எத்தனை முறை கோரிக்கை வைத்திருக்கிறேன்… பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் எத்தனை முறை கோரிக்கை வைத்திருக்கிறேன்… இதிலே கூட எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர மாட்டீர்களா? இருந்தாலும், ஆளுநர் ரவியை மாற்றினாலும், நம்முடைய வெற்றியை இன்றைக்கு உறுதி செய்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அரசியல் சூழலில்தான், திமுகவை நோக்கி இன்றைக்கு எல்லோரும் வந்திருக்கிறீர்கள்… பத்து தோல்வி பழனிசாமி கட்சியில் இருந்து, வெல்லும் தி.மு.க.வுக்கு வந்திருக்கிறீர்கள்… உங்களுக்கு ஏராளமான தேர்தல் வேலைகள் காத்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய கூட்டணியின் வெற்றிக்காகக் கடுமையாக உழையுங்கள்! 200 தொகுதிகளுக்கும் மேல் நாம் வெற்றி பெற வேண்டும்! உங்கள் உழைப்புக்கு நிச்சயம் அங்கீகாரம் இருக்கும்” என்று கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share