கட்சி ஆரம்பிப்பது… அடுத்த முதல்வரென்பது… எல்லாம் பகல் கனவு : அறிவுத்திருவிழாவில் ஸ்டாலின் பேச்சு!

Published On:

| By Kavi

திமுகவை போல வெற்றி பெற சிலர் பகல் கனவு காண்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்,  இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

பின்னர், “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டார். 

பின்னர்  இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,  ‘தி.மு.க.வின் 75 ஆண்டுப் பயணத்தை நினைவுகூரும் இந்த விழாவிற்கு, “அறிவுத் திருவிழா” என்று உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

ADVERTISEMENT

கழகத்தைத் தொடங்கியது “அறி”ஞர் அண்ணா! ஐம்பதாண்டு காலம் அதைக் கட்டிக் காத்தவர் முத்தமிழ் “அறி”ஞர்! கழகத்தின் முதல் தலைமையகம் பெயர் “அறி”வகம்! தலைவர் கலைஞர் கட்டிய தற்போதைய தலைமையகத்தின் பெயர் “அறி”வாலயம்’! இவ்வாறு, அறிவை மையப்படுத்தி, அறிவொளியைப் பரப்புவதையே தலையாய கடமையாக நினைத்து இயங்கி வரும் கட்சியின் 75-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை, ‘அறிவுத் திருவிழா’ என்று சொல்லாமல், வேறு என்ன சொல்லி அழைக்க முடியும்?” என்றார். 

மேலும் அவர்,  “ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான்” என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. கழகத்தின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடித் தொண்டர் வரை, சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தார்கள்! எத்தனை பத்திரிகைகள்! எத்தனை புத்தகங்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை கொள்கை வகுப்பெடுக்கும் நாடகங்கள், திரைப்படங்கள்! எத்தனை போராட்டங்கள்! எத்தனை சிறைவாசங்கள்! எத்தனை தியாகங்கள்! எத்தனை துரோகங்கள்! தி.மு.க. உழைத்த உழைப்பு, சாதாரண உழைப்பல்ல!

ADVERTISEMENT

சமூகத்தில் சரிபாதி மக்கள் படிப்பறிவு கூட இல்லாமல் இருந்த காலத்தில், குக்கிராமத்தில் இருக்கும் முடிதிருத்தும் சலூன் கூட மக்களின் சிந்தனையைத் திருத்தும் மையமாக செயல்பட்டது. சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடாமல், திராவிட இயக்க இதழ்களை ஒரு தி.மு.க.காரர் வாசிக்க, அவரைச் சுற்றி பத்து பேர் செவி வழியாகக் கேட்டு உலக வரலாற்றைத் தெரிந்து கொண்டார்கள். கிராமத்தில் இருக்கிறவர்களும் கியூபா புரட்சியை தெரிந்து வைத்திருந்தார்கள். ரஷ்யப் புரட்சியைப் பற்றி படித்து, ஊக்கமும் உறுதியும் பெற்றார்கள். இவ்வாறு நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை!


இந்த வரலாறு பற்றியெல்லாம் தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்! இன்னும் சில அறிவிலிகள் தி.மு.க.வைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். தி.மு.க.வைப் போன்று வெற்றி பெற, தி.மு.க.வைப் போன்று உழைப்பும், அறிவும் தேவை! ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரு தி.மு.க.தான்! இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது” என்றார். 

அதுபோன்று,   ‘இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளை, காலத்திற்கு ஏற்ற மாதிரி, வீடியோக்களாக மாற்றி, சோஷியல் மீடியாவில் அனைத்து இளைஞர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்!

நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், சோனியா காந்தி முதல் – அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும், தங்கள் பார்வையில் நம்மை அளவிட்டு எழுதியிருக்கிறார்கள்! ஒரு மாநிலக் கட்சியை, அகில இந்தியத் தலைவர்களும், மற்ற மாநிலத் தலைவர்களும் புகழ்ந்து எழுதுவது சாதாரணமாக நடந்துவிடாது!

முக்கியமான தலைவர்கள் நம் இயக்கம் பற்றிச் சொன்ன கருத்துகளில் ஹைலைட்டாக ஒரு வரியை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், என் மதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, “ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம்” என்று சொல்லியிருக்கிறார்.

லாலு பிரசாத், “சமூகநீதிக்காக 75 ஆண்டுகள் போராடிய இயக்கம்” என்று பாராட்டியிருக்கிறார்.

சரத் பவார, “கூட்டாட்சியின் வலிமையான பாரம்பரியம்” என்று சொல்லியிருக்கிறார்.

சி.பி.ஐ. தேசிய செயலாளர் டி. ராஜா, சமத்துவத்தின் முகமாக நம்மை பார்க்கிறார். 

பரூக் அப்துல்லா, “மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமைக்காகப் பயணிப்பவர்கள்” என்று சொல்லியிருக்கிறார்!.

அகிலேஷ், “எங்களுக்கும் தி.மு.க.விற்கும் இருப்பது லட்சியங்களுக்கான உறவு” என்று சொல்லியிருக்கிறார்.

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக விரைவில் வர இருக்கக் கூடிய, நாம் எதிர்பார்த்திருக்க கூடிய தேஜஸ்வி, நம்மை ஜனநாயகத்தின் தோழனாகப் பார்க்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால், “அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைக் கட்ட நினைக்கும் இயக்கம்” என்று சொல்கிறார்.

இப்படி, இந்தியாவே போற்றும் இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்திருக்கிறது!

இந்தச் சாதனைகளும் – வளர்ச்சியும்தான் பலரின் கண்களை உறுத்துகிறது! நாம் பேசும், சமூகநீதி – சுயமரியாதை – மாநில சுயாட்சி – கூட்டாட்சி – ஆகிய கருத்துகள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவிவிட்டது! “என்னடா இவர்களைத் தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால், இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே” என்று கோபப்படுகிறார்கள்.

நம் இயக்க வரலாறு முழுவதுமே போராட்ட வரலாறுதான்! நம்முடைய போராட்ட வரலாற்றை நினைவூட்டும் கொள்கைத் திருவிழாதான், இந்த அறிவுத் திருவிழா! முற்போக்கு விழாவாக, கருப்பு – சிவப்பு – நீலம் – சேர்ந்திருக்கும்போது எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது! இந்தியாவின் ஜனநாயகத்தையும் – தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் காக்க – 2019 முதல் தொடரும் நம்முடைய பயணம், 2026-லும் மாபெரும் வெற்றியைப் பெறும்! “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்” என்று கூறியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share