தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 28) சென்னையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அறிவித்ததோடு, திமுக வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்தார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, ரகுபதி, எ.வ.வேலு உள்ளிட்டோர் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் அறிவித்திருக்கும் வேட்பாளர்கள் மட்டுமல்ல, எங்கள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் மாபெரும் வெற்றி பெறும் வகையில் எங்களது பணியை ஆற்றுவோம். தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் இருந்து இந்த உறுதியை எடுத்துள்ளோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து, “இப்போதும் களம் தமிழ்நாடு Vs டெல்லி என்று உள்ளதா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதில் என்ன சந்தேகம்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “இந்தத் தேர்தல் எப்படி இருக்கும்?” என்ற கேள்விக்கு, “திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறக்கூடிய வகையில் அமையும்” என்றார்.
களத்தில் புதியவர்கள் வந்துள்ளனர். ஐந்து முனை போட்டி நிலவுவது குறித்த கேள்விக்கு, “எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்கள் கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.
