தொழிலாளர்களுக்காக பாடுபடுகின்ற திமுக ஆட்சிக்கு என்றைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 1) வேண்டுகோள் விடுத்துள்ளார். Stalin request Labours on May day
மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா நினைவுச் சின்னத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, சிவசங்கர், மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன், நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,
“உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான் என்று பெரியார் பெருமையோடு குறிப்பிட்டு காட்டியுள்ளார்.
1932-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்தவர் பெரியார். ரஷ்யா போன்ற பல நாடுகளுக்கு சென்று விட்டு, தமிழ்நாடு திரும்பிய பெரியார் இனி அனைவரையும் தோழர்கள் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொன்னார்.
மே நாளை தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் இசை நிகழ்ச்சிகளோடு கொண்டாட வேண்டும் என்று சென்னை நகரம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொழிற்சங்க செயல்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது.
8 மணி நேரம் வேலை என்னும் உரிமைப் போரில் வென்றதற்கு இந்தியாவிலேயே முதன்முதலில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் மே தினம் கொண்டாடப்பட்டது என்பதை இந்த நேரத்தில் நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
அதற்கு முன்பே தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்க பெரும் முயற்சிகளை நீதிக்கட்சியின் தலைவர் டி.எம்.நாயர் எடுத்திருக்கிறார். உழைப்புக்கு மதிப்பளித்து உண்மையாக இருக்க வேண்டும் என்று சொன்னால், உழைப்பவனுக்கு முதலில் மதிப்பளிக்க வேண்டும் என்று அண்ணா சொன்னார்.
அதன்படியே, 1967-ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணா தலைமையில் திமுக வெற்றி பெற்றதும் மே 1 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கொண்டு வந்தார். அதற்கு பிறகு கலைஞர் மே விடுமுறையை சட்டமாக்கி தந்தார்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மே 1 அன்று ஊதியத்தோடு கூடிய விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றித்தர கலைஞர் பாடுபட்டார்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பதைப் போல, தொழிலாளர்கள் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
எந்த முதலீட்டு திட்டங்களை தொடங்கி வைத்தாலும், எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும் என்பது தான் நான் கேட்கும் முதல் கேள்வி. தொழிலாளர்கள், நிர்வாகம் இடையிலான பிரச்சனைகளை பேச்சுவார்த்தையின் மூலமாக முடிவுக்கு கொண்டு வருகிறோம். அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மே தினம் கொண்டாடக்கூடிய இந்த நாளில் உங்களுக்காக பாடுபடுகின்ற திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். Stalin request Labours on May day