”திருப்புவனம் லாக்கப் மரண வழக்கில் உடனடி நடவடிக்கை” : ஸ்டாலின் பதில்!

Published On:

| By christopher

stalin reaction on thirupuvanam lock up death

”திருப்புவனம் இளைஞர் லாக் அப் மரண வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். stalin reaction on thirupuvanam lock up death

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பிரச்சார இயக்கத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலினிடம் திருப்புவனம் இளைஞர் லாக் அப் மரண வழக்கு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மரண வழக்கில் தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்று கூட மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டம் மூலம் வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள் செல்வார்கள். அங்கு திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்பார்கள்.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு இழைத்து வரும் இடையூறுகள் என்பது அனைவருக்கும் தெளிவாக தெரியும். இருந்தாலும் அதை மக்களுக்கு நினைவூட்டுகிறோம்.

திமுகவின் அமைப்பு ரீதியில் 76 மாவட்டங்களிலும் நாளை முதல் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் முதல் அனைத்து வீடுகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யப்படும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பாரபட்சம் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் கூட போய் பிரச்சாரம் செய்வோம்.

எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களும் விருப்பம் இருந்தால், கட்சியில் இணைக்கப்படுவார்கள். எடப்பாடி இப்போது தான் மக்களை சந்திக்கப் போகிறார். நாங்கள் எப்போதும் மக்களை சந்தித்து தான் வருகிறோம்.

திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பிருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்ததும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

காலை உணவுத் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் இல்லாதது, அதை நிறைவேற்றியுள்ளோம். மகளிர் உரிமைத் தொகை திட்டம் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தவறான தகவல் காரணமாக சிலருக்கு இன்னும் உரிமைத் தொகை கிடைக்காமல் உள்ளது. அதற்காக தனியாக முகாம் நடத்தி, அவர்களுக்கும் செப்டம்பர் மாதம் முதல் வழங்க உள்ளோம். பேருந்தில் கட்டணமில்லா பயணம். மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் என இப்படி எண்ணற்ற திட்டங்கள் உள்ளன. நான் முதல்வன் திட்டம் மூலமாக 40 லட்சம் பயிற்சி கொடுத்துள்ளோம். 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரதமரும், அமித் ஷாவும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரவேண்டும். அதனால் தேர்தல் சமயத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். அவர்கள் ஒவ்வொரு முறையும் வரும்போதெல்லாம் பொய் கூறுகிறார்கள். இது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

ஆளுநரைக் கூட மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால், நாங்கள் அதுபோல் கேட்கவில்லை. அவர் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டு திமுகவுக்குத்தான் நன்மை செய்கிறார்” என ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share