ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ’30 நாள் விலக்கு அளித்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை பராமரிக்க, அமெரிக்க கருவூலத் துறை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க 30 நாள் விலக்கு அளித்துள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மத்திய மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “அமெரிக்கா நிர்ணயிக்கும் 30 நாள் அவகாசத்தில் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது என்பது, ஒரு நாட்டின் எரிசக்தித் தேவைக்கு இன்னொரு நாட்டின் அனுமதியை எதிர்பார்க்கும் நிலையைத் தோற்றுவிக்கிறது. நமது நாட்டின் எரிசக்தித் தேவையைத் தீர்மானிக்க நமக்கு ஏன் பிற நாடுகளின் அனுமதி தேவை என்ற அடிப்படை கேள்வி எழுகிறது!
அதேபோல், விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய ‘சர்வதேசக் கடற்படை ஆய்வு 2026’ (IFR 2026) பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ஈரானின் ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) என்ற ஆயுதமற்ற போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்திருப்பது பெரும் கவலையளிக்கிறது. பன்னாட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தியா வந்த கப்பலுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கும்போது, இந்தியா மௌனமாகவோ அல்லது செயலற்றோ இருப்பது முறையல்ல.
மத்திய பாஜக அரசு, இந்தியாவின் நீண்டகால பாரம்பரியமான ‘மூலோபாயத் தன்னாட்சி’ (Strategic Autonomy) மற்றும் ‘சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை’ ஆகியவற்றில் முழுமையாக சமரசம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்; தேசத்தின் இறையாண்மையும் நலன்களும் எவ்விதச் சமரசமுமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்!” என வலியுறுத்தி உள்ளார்.
இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
