முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோடு போட சொன்னால் ரோடு போட்டுவிடுவார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக சார்பில், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முப்பெரும் விழா கரூரில் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மேற்கொண்டார்.
இந்நிலையில் முப்பெரும் விழாவில் நிறைவுரையாற்றி பேசிய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், “திமுகவின் ஊர் கரூர். கொட்டும் மழையில் தான் வடசென்னை ராபின்சன் பூங்காவில் திமுகவை அண்ணா தொடங்கி வைத்தார். 75 ஆண்டுகள் அல்ல நூற்றாண்டை காண போகிறோம்.
உங்களிடம் பேசுவதை விட, இந்த கொட்டும் மழையிலும் உங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என எனக்கு உணர்வு ஏற்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின், ”என்னுடைய அருமைமிகு, பாசமிகு, ஆற்றல்மிகு சகோதரர் செந்தில் பாலாஜி” என புகழ்ந்து பேசினார்.
“இந்த ஆண்டு முப்பெரும் விழாவை கரூரில் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டு செந்தில் பாலாஜி என்னிடம் வந்தார். நானும் ஒப்புதல் அளித்தேன்.
பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாநாட்டையே ஏற்பாடு செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி. நாம் கோடு போட சொன்னால் ரோடு போட்டுவிடுவார்.
நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள், ரோடு போட்டு அதன் மீதுதான் வாகனத்தில் வந்தேன்.
மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பமனமாக இருப்பவர் செந்தில் பாலாஜி. அதனால் தான் அவர் வெளியில் இருந்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்று முடக்க பார்த்தார்கள். முடியுமா….
எடுத்தப்பணியை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவார். நான் உறுதியாக சொல்கிறேன்… திமுக வரலாற்றிலேயே இப்படியொரு பிரம்மாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது.
கொட்டுகின்ற மழையாக இருந்தாலும் கொடையை பிடித்துக்கொண்டும், நாற்காலியை தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருக்கிறீர்கள்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்று உழைத்திருக்கக் கூடிய செந்தில் பாலாஜிக்கும், கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
திமுக சார்பில் எனது இருகரம் கூப்பி அத்தனை பேருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று வாழ்த்தி பேசினார்.