வைஃபை ஆன் செய்ததும், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்துக்கு பின்னணியில் இப்படியும் ஒரு ‘ஸ்கெட்ச்’.. என தகவலைப் பகிர்ந்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்ன ஸ்கெட்ச்? யார் போட்டதாம்?
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்துவிட்டு இன்று (செப்டம்பர் 8) காலை சென்னை திரும்பினார். தமிழகத்துக்கான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள விவரங்களை பெருமிதத்துடன் பகிர்ந்தார் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை தொடங்கும் போது மத்திய அரசின் IB-க்கு ஒரு தகவல் போயிருக்கிறது. “முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க மட்டுமல்ல.. முதலீடு செய்யவும் வெளிநாடு போகிறார்” என்பதுதான் அந்த தகவலாம்.
ஓஹோ.. மத்திய அரசு என்ன செய்தது?
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்ப்பது பற்றி பேச்சுவார்த்தைகளைத் தவிர ‘வேறு முதலீடு’ தொடர்பான சந்திப்புகள் நடைபெறுகிறதா? என கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனியில் இறங்கியது முதலே மத்திய அரசின் IB- வெளிநாடுகளில் உள்ள தங்களது ‘ஏஜென்சிகள்’ மூலம் உன்னிப்பாக கண்காணித்தது. ஸ்டாலின் யார் யாரை சந்திக்கிறார்? அப்படி சந்திப்பவர்களின் பின்னணி என்ன? இத்தகைய சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் இருக்கின்றனரா? சிஎம் ஸ்டாலின் தங்கிய இடங்களில் ரகசியமான சந்திப்புகள் நடக்கிறதா? என ஒவ்வொரு நகர்வையும் அவ்வளவு உன்னிப்பாக கண்காணித்திருக்கின்றனர்.

இந்த அளவுக்கு ஒரு மாநில முதல்வரை ‘நோட்டமிட’ ஏதாவது காரணம் இருக்கனுமே?
நிச்சயம்.. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் திமுக அரசுக்கான நற்பெயரை டேமேஜ் செய்துவிட வேண்டும் என்பதுதான் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் திட்டம்.
ஆனால் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பல்வேறு விஷயங்களில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். அதனால் அவர் ஓய்வு பெறுகிற நவம்பர் 23-ந் தேதி வரை பெரிய அளவுக்கு திமுக அரசுக்கும், ஸ்டாலின் குடும்பம் மற்றும் திமுக அமைச்சர்களுக்கு நெருக்கடி தந்து சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டாம் என முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு.
இதனால், பிஆர் கவாய் ஓய்வு பெற்ற பின், சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக திமுகவுக்கு குடைச்சலைத் தொடங்கிவிடலாம்; திமுகவின் மூத்த அமைச்சர்கள் மட்டுமல்ல.. முதல்வர் ஸ்டாலின் குடும்பம் வரை நடவடிக்கை எடுக்கலாம் என காத்திருக்கிறது மத்திய அரசு. அதற்கு ஏதுவாக, முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மன், இங்கிலாந்து பயணத்தில் ‘ஏதாவது கிடைத்துவிடாதா’ என்ற பரிதவிப்பில்தான் இத்தனை கண்காணிப்பாம்..
ஓஹோ.. IB-க்கு என்னதான் ரிப்போர்ட் போயிருக்கிறது?

இது பற்றி நாம் டெல்லி வட்டாரங்களில் விசாரித்த போது, “சிஎம் ஸ்டாலினை வெளிநாடுகளில் இப்படி நெருக்கமாக கண்காணித்த போதும், இந்த பயணத்தில் அவரது தனிப்பட்ட சொந்த முதலீடுகள் தொடர்பான எந்த சந்திப்பும் நடக்கவில்லை; சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் ஸ்டாலினை சந்திக்கவும் இல்லை என்கிற உறுதியான ரிப்போர்ட்தான் IB-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. இதனால் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு ரொம்பவும் ஏமாற்றமாகிவிட்டது” என்கின்றன.
இத்தனை கலகத்துக்குப் பின்னரும் எடப்பாடி செம்ம ஹேப்பியாமே?
ஆமாம்.. நமக்கு அப்படித்தான் தகவல் வந்துள்ளது. ‘அதிமுகவில் இருந்து வெளியே இருப்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார் இல்லையா?
இந்த செங்கோட்டையனின் பேட்டிக்குப் பின்னர், அதிமுக நிர்வாகிகள் என்ன நினைக்கின்றனர்? என ஒரு ரிப்போர்ட்டை எடப்பாடி பழனிசாமி தமது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டிருந்தார்.
இந்த ரிப்போர்ட்டில் இருக்கும் முக்கியமான ஒரு தகவல்தான் எடப்பாடி பழனிசாமிக்கு ரொம்ப மகிழ்ச்சியும் ஆகப் பெரும் தைரியத்தையும் கொடுத்துள்ளதாம்..
அப்படி என்ன ‘பூஸ்ட்’ தகவல்?
அதிமுகவின் இன்றைய மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி ஒன்றியம், பேரூர் வரையிலான நிர்வாகிகள் அனைவரும் ஒரு விஷயத்தில் ஒரே கருத்தையே சொல்லி இருக்கின்றனர்.
அதாவது, “அதிமுகவுக்குள் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளே வந்துவிட்டால் எங்களோட கட்சி பதவிகளுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.. யார் பதவியும் எந்த நேரத்திலும் பறிபோகும்.. விடிந்து எழுந்தால் எங்க பதவி வேறு ஒருவர் வசமாகிவிடும்.. ஆனால் எடப்பாடி தலைமையில் அப்படி எல்லாம் அச்சப்படாமல் கட்சிப் பணிகளை முழுமையாக செய்தால் நிச்சயம் கட்சி பதவிகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் ஈடுபாட்டுடன் வேலை செய்கிறோம்” என சொல்லி இருக்கின்றனர் நிர்வாகிகள்.
அதேபோல, முன்னாள் அமைச்சர்களும், “சசிகலா- தினகரன் கை கட்சியில் ஓங்கியிருந்த போது, அமைச்சரவை மாற்றம் என்பது தொடர்ந்து கொண்டே இருந்தது; எவருக்குமே அமைச்சர் பதவி நிரந்தரம் இல்லை என்ற பதற்றம்தான்..

தேர்தலுக்கு கட்சி தலைமை தருகிற பணம், எங்க கிட்ட இருக்குன்னு தெரிஞ்சாலே போதும்.. ஜெயா டிவிக்கு பணம் தேவைன்னு சொல்லி அந்த பணத்தை மட்டும் அல்ல.. எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவையும் வாங்கிட்டு தூக்கி அடிச்சுடுவாங்க.. ஆனால் இபிஎஸ் முதல்வராக இருந்த காலத்தில் எந்த பிரச்சனையுமே இருந்தது இல்லை.. தேர்தல் செலவு நாங்க செஞ்சாலும் கூட பயம், பதற்றம் வந்தது இல்லை.. இப்ப சசிகலா குடும்பம் உள்ள வந்துச்சுன்னா இந்த நிலைமை தலைகீழாகப் போகும்” என சொல்லி இருக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக, அதிமுகவின் தற்போதைய நிர்வாகிகள் அனைவருமே “எடப்பாடி பழனிசாமியின் தலைமையே எங்களுக்கு ஓகே.. பிரச்சனையே இல்லை” என ஆணித்தரமாக சொல்கிறதாம் அந்த ரிப்போர்ட்.
“இதைப் படித்துவிட்டுதான் எடப்பாடிக்கு ரொம்பவே மகிழ்ச்சி.. கூடுதலான வலிமை கிடைச்ச மாதிரி தைரியம்.. இனி கட்சி விரோத நடவடிக்கை, கட்சிக்கு துரோகம் என யார் நினைச்சாலுமே நடவடிக்கை உடனே பாயும் என்கிற துணிச்சலையும் கொடுத்திருக்கிறது” என்கின்றன இபிஎஸ்-க்கு நெருக்கமான வட்டாரங்கள்.
அதனால, அதிமுகவில் செங்கோட்டையனுடன் சேர்ந்து கொண்டு ‘கலகம்’ செய்கிறோம்.. ‘போர்க்கொடி தூக்குறோம்’ என யார் நினைத்தாலும், ‘டக்கென தட்டி தூக்கிடுவார் எடப்பாடி’.. இப்படி ஒரு வலிமை இருப்பதால் செங்கோட்டையனுடன் சேர நினைக்கும் சிலரும் திகலடித்தவர்களாய் திகைத்து போய் நிற்கின்றனர் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.