திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். Stalin birthday pledge
இதை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 28) முதல் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் நலத் திட்ட உதவிகளை செய்து ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

சென்னையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இன்று காலை முதல்வர் ஸ்டாலின் அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் திடலுக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.

கோபாலபுரத்துக்கு சென்று தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார்.

அண்ணா அறிவாலயம் சென்ற அவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

அறிவாலயத்தில் அமைச்சர்கள், தொண்டர்கள், நிர்வாகிகளிடமும் வாழ்த்து பெற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப்,

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், எம்.கிருஷ்ணசாமி,

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்கள் வி.நாராயணசாமி, வைத்தியலிங்கம்,

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் என பலரும் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், அண்ணா அறிவாலயத்தில் “ஒரே இலக்கு – தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்,
முதல்வர் ஸ்டாலினுக்கு புத்தகம், பழங்கள், இனிப்புகள்,வெள்ளி வாள் உள்ளிட்டவற்றை நினைவு பரிசாக வழங்கப்பட்டன.
திருவண்ணாமலையை சேர்ந்த திமுகவினர் 250 கிலோ எடைக்கொண்ட பித்தளையில் வடிவமைக்கப்பட்ட சிங்கம் சிலையை, முதலமைச்சருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினர். அப்போது பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீண்ட வரிசையில் வந்த தொண்டர்களிடம் சுமார் 4 நான்கு மணி நேரம் வரை நின்று அன்பையும் பரிசையும் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.