20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2,538 இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “கடந்த நான்கு ஆண்டுகளில் T.N.P.S.C – T.R.B – M.R.B – T.N.U.S.R.B உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவும், நகராட்சி நிர்வாகம், கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை மற்றும் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாகவும், 1 இலட்சத்து எட்டாயிரத்து 111 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம்!
திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக, “நான் முதல்வன்” திட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, 3 இலட்சத்து 28 ஆயிரத்து 393 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம்! தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, 2 இலட்சத்து 65 ஆயிரத்து 223 பேருக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம்!
முதன்முறையாக, விளையாட்டுத் துறையில், தேசிய மற்றும் உலகளவில் சாதனை படைத்திருக்கக்கூடிய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதன்மூலம் 84 நபர்களுக்கு இந்த ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது!
நான் முதல்வன் திட்டத்தில், பயிற்சிபெற்ற 89 இளைஞர்கள் பல்வேறு முக்கிய ஒன்றிய அரசுப் பணிகளில் இடம் பிடித்திருக்கிறார்கள்! அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தில் படித்த 18 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது!
இப்படி, மொத்தம் 6 இலட்சத்து 41 ஆயிரத்து 664 பேர், கடந்த நான்காண்டுகளில், பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள்!
பல்வேறு இந்திய நிறுவனங்களுக்கும், M.N.C-களுக்கும் தமிழ்நாடுதான் முதலீடுகளுக்கான Destination! கடந்த நான்கு ஆண்டுகளில், உற்பத்தி துறை, I.T. துறை, கட்டுமானத் துறை என்று பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் மேற்கொண்ட 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 10 இலட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திருக்கிறார்கள்!
இப்படி, கல்வியைச் சுற்றியும் – அறிவைச் சுற்றியும் – ஆற்றலைச் சுற்றியும் செயல்படக்கூடிய முன்னெடுப்புகளின் வரிசையில், அடுத்து, கல்லூரியில் படிக்கும் 20 இலட்சம் மாணவர்களுக்கு Laptop தரப்போகிறோம்!
பொதுவாக, நான் மாணவர்களிடம் பேசும்போது, “கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று சொல்லி அவர்களை Motivate செய்வேன். அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை பெற்று, முன்னேற்றத்திற்கான முதல் படியில் காலடி வைக்கும் இளைஞர்களான உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, “நாள்தோறும் உலகம் அப்டேட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதற்கு சம்மாக நீங்களும் அப்கிரேடு ஆக வேண்டும்! தேக்கம் என்பதே உங்களின் கெரியரில் இருக்க கூடாது! அதற்கு ஏற்றது போல ஸ்கில் டெவலப் செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு சப்போர்ட் செய்ய நாங்கள் இருக்கிறோம்” என்று கூறினார்.