கல்வியின் வரலாறாக வாழ்ந்த எஸ்.எஸ்.ஆர் : யார் இந்த மாமனிதர்?

Published On:

| By Minnambalam Desk

SSR who Lived as a History of Education
நா.மணி

தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டி, தேசிய அளவிலும் சில மாநிலங்களிலும்
அவரது கல்விப் பணிகள் நிரம்பியுள்ளது. தமிழக கல்வியில் காத்திரமான பங்களிப்பு செய்தவர். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி வரலாற்றில் பின்னிப் பிணைந்தவர்.‌ சமச்சீர் கல்வி உள்ளிட்ட ஏராளமான கல்வி குழுக்களில் இடம் பெற்றவர்.

கற்றல், கற்பித்தல், பாடத்திட்டம், கலைத்திட்டம், தேர்வு சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் பெரும் பங்களிப்பு செய்தவர். கல்வியில் ‘நுண்மான் நுழைப்பழம்’ மிக்கவர் என்ற சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர். கல்வி புலத்தில் அவரை அறியாதவர் யாரும் இல்லை. ஆனால் இன்று யாரும் அறியாத வண்ணம் அவரது மறைவும், ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவரது உடல் தானமும் நடந்து முடிந்து விட்டது.

ADVERTISEMENT

யார் இவர்?

எஸ் எஸ் ஆர் என்று எல்லோராலும் சுருக்கமாக அழைக்கப்பட்ட எஸ் எஸ் ராஜகோபால் பள்ளி ஆசிரியராக தனது பணியை துவங்கியவர். ஆசிரியர் பணி ஆணை கிடைத்த மறுநாள் அஷ்டமி நவமி. அவருடன் பணி ஆணை பெற்ற யாரும் அந்த இரண்டு நாட்களில் பணிக்குச் சென்று சேரவில்லை. எஸ்.எஸ்.ஆர் மட்டும் அஷ்டமி அன்றே பணிக்குச் சேர்ந்தார். இதன் காரணமாக, மற்றவர்களை காட்டிலும் 13 ஆண்டுகளுக்கு முன்பே தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றதாக கூறி சிரிப்பார்.

ADVERTISEMENT

அரசுப் பள்ளியில் பணி வாய்ப்பு கிடைத்தாலும், அங்கு அவர் தொடர்ந்து பணியாற்ற வில்லை. கோவையின் புகழ்பெற்ற சர்வஜனா மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் அழைப்பின் பேரில், அதில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். அப்போது பணியில் செய்த சீர்திருத்தங்கள், வளர்ச்சிப் பணிகள், கற்றல் கற்பித்தல் முறையில் செய்த மாற்றங்கள், பள்ளி நிர்வாக மேலாண்மை, ஆகியவற்றை தனி புத்தகமாக தொகுத்து எழுத வேண்டியது.

SSR who Lived as a History of Education

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுப்பவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பில் இடம் கொடுக்கும் காலத்தில், மாணவர்களின் விருப்பம், ஆர்வத்தைப் பொறுத்து சேர்க்கை அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பத்தாம் வகுப்பில் மிக குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் ஆர்வத்திற்கு மதிப்பு அளித்ததன் விளைவாக, நல்ல நிலைமையை அடைந்த மாணவர்களை அடையாளம் கண்டு, அதனை வெளி உலகத்திற்கு பதிவு செய்தார்.

ADVERTISEMENT

பணி ஓய்வுக்குப் பிறகு எஸ்எஸ்ஆர் இன்னும் காத்திரமாக கல்விக்கு பங்களிப்பு செய்தார். முழு நேர கல்வி பணி என்றும் அதனை கூறலாம். அவர் அளவுக்கு கல்விக் கோட்பாடுகள், கொள்கைகள், திட்டங்கள், அதில் நிகழ்ந்த சிறிய சிறிய மாற்றங்கள்,

நேரிடையான அனுபவங்கள் , ஆற்றல், முதிர்ச்சி உள்ள மனிதர்கள் தற்போது யாரும் இல்லை என்றே அறுதியிட்டு கூறலாம். அவருக்கு இருந்த ஞாபக சக்தி அளப்பரியது. அவரே ஒரு கல்வியின் வரலாறு என்றால் மிகை இல்லை. கல்விக்கான என்சைக்கிளோபீடியா என்று கூறினாலும் அது மிகைப்படுத்தப்பட்ட செய்தி ஆகாது. தனக்குத் தெரிந்து, யார் எந்த இடத்தில் தவறு செய்தாலும், அது புள்ளிவிபரம் அல்லது சம்பவம் எதுவாக இருந்தாலும் தவறாக கூறிவிட்டால், அதனை சுட்டிக்காட்டத் தவற மாட்டார். 95 வயது வரை வாழ்ந்தார் என்றாலும், சிந்தனைகள் இளமையாகவும் சமகாலத்திற்கு ஏற்ற பங்களிப்பு செய்ததாகவும் அவரது செயல்பாடுகள் இருந்தது.

தமிழக, இந்திய கல்வி வளர்ச்சி போக்குகளை விரல் நுனியில் வைத்திருந்தவர் எஸ் எஸ் ஆர். அது பற்றி எழுதுவார். அவர் எழுத்துக்கள் மிகச் சுருக்கமாகவே இருக்கும். என்ன சொல்ல வேண்டுமோ அதனை மட்டும் சுருக்கமாக கூறிவிட்டு முடித்துக் கொள்வார். அவரைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் இன்னும் ஒரு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. அது, தினமணி, இந்து தமிழ் உள்ளிட்ட, எண்ணற்ற, வார,மாத, இதழ்களில் வாசகர்கள் கடிதங்கள் எழுதுவது. அதில் அவர் பகிர்ந்த விஷயங்களை தொகுத்தால், அதுவே பல தொகுதிகளாக உருவெடுக்கும். அவரது எண்ணற்ற கட்டுரைகள் தொகுக்கப்படாமல் இருக்கலாம். அவை தொகுப்பாக கொண்டுவரப்பட்டால், தமிழ் சமூகத்திற்கு ஒரு பெரும் கொடையாக இருக்கும்‌. ‘புதிய ஆசிரியன்’ இதழில் எண்ணற்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார். அவற்றில் சில புத்தகங்களில் தொகுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயம் சில நூல்களை வெளியிட்டு இருக்கிறது.

SSR who Lived as a History of Education

எழுதுவது, பேசுவது என்று நில்லாமல், தமிழக இந்திய கல்வி பிரச்சனைகள், சவால்களை முன்னிறுத்தி போராடும் மக்கள் இயக்கங்களோடு நீக்கமற கலந்து நின்றார். புதிய கல்விக் கொள்கை,நீட், ஆசிரியர் பிரச்சனைகள் என கல்வி சார்ந்த பிரச்சனைகள் வரும் போதெல்லாம் அதோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு களத்தில் நின்றார். பணி ஓய்வுக்கு பிறகு படிப்பது எழுதுவது கல்வி தொடர்பான நிகழ்வுகளில் பங்கு பெறுவது என்பதை தனது முழு நேர பணியாக கொண்டிருந்தார்.

ஏராளமான இதழ்களுக்கு சந்தா செலுத்தி வாங்கிப் படிப்பார். அதில் குறிப்பாக சிற்றிதழ்களுக்கு தொடர்ந்து சந்தா செலுத்தியும் அவற்றில் எழுதியும் வந்தார். தான் பத்தாண்டு சந்தா செலுத்தி இருந்த ஒரு பிரபலமான மாத இதழ்,தொடர்ந்து மக்கள் நலனுக்கு விரோதமாக சில கட்டுரைகளை வெளியிட்டது‌ அதனை தொடர்ந்து, “என் சந்தா அப்படியே இருக்கட்டும். ஆனால், உங்கள் இதழை இனிமேல் எனக்கு அனுப்ப வேண்டாம். இன்ன காரணங்களுக்காக உங்கள் இதழை தொடர்ந்து வாசிக்க விரும்பவில்லை” என்று எழுதிவிட்டு, அந்த கடிதத்தை பொதுவில் பகிர்ந்து கொள்ளவும் செய்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற மக்கள் அறிவியல் இயக்கங்களோடு நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். அதன் வெளியீடுகளான துளிர், ஜந்தர் மந்தர் போன்ற இதழ்களை வாசித்து, அதன் செயல்பாட்டாளர்களை சந்திக்கும் போது கருத்து பகிர்வார். அவரை கருத்துரை வழங்கவோ, நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ அழைத்தால், எங்கு சென்றாலும், எவ்வளவு தூரம் சென்றாலும், பயண செலவு எவ்வளவு என்றாலும் தானே ஏற்றுக் கொள்வார். “பயணச் செலவு கூடுதல். கொஞ்சம் பங்களிப்பு செய்கிறோம்” என்று கேட்டால் ஓய்வூதியம் கொடுப்பது அதற்கும் சேர்த்துத் தான் என்பார்.

தனது மனைவி இருக்கும் வரை சென்னை சாலிகிராமத்தில் குடியிருந்தார். இரவு 9 மணிக்கு படுத்துக் கொள்வது அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பது எழுதுவது என்பதை தனது இறுதி காலம் வரை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.‌தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார். 3/ 2/26 அன்று இரவு கோடம்பாக்கம் ஜே வி மருத்துவமனையில் காலமான அவரது உடல், 4/2/ 26 அன்று காலை 8 மணி அளவில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுகளுக்கு மேல் கல்விக்கு காத்திரமான பங்களிப்பை செலுத்திய ஒரு மாமனிதர், யாருக்கும் தெரியாமல் இம்மண்ணுலகை விட்டு மறைந்தது நம் காலத்தின் மிகப்பெரும் சோகம்.

கட்டுரையாளர்:

SSR who Lived as a History of Education - Article in Tamil By Professor N Mani

நா.மணி, மேனாள் தலைவர், தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share