மகேஷ் பாபு உடன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கைகோர்த்துள்ள படத்தின் டைட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதனால் ’எஸ்எஸ்எம்பி29’ என்றே இப்படம் குறிப்பிடப்படுகிறது. இதில் நாயகியாக பிரியங்கா சோப்ரா, வில்லனாக மலையாள நட்சத்திரம் பிருத்விராஜ் நடிக்கின்றனர்.
புதையலைத் தேடிச் செல்லும் நாயகன் என்ற கதையம்சத்தை இப்படம் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் கென்யாவில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அந்நாட்டின் முதன்மைச் செயலரான முசலியா எம்.முடவாடி. ஆப்பிரிக்க கண்டத்தில் படம்பிடிக்கத் திட்டமிட்ட காட்சிகளில் 95 சதவிகிதத்தை கென்ய நாட்டில் இயக்குனர் ராஜமௌலி நிறைவு செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
மேலும், கண்டங்களைத் தாண்டி ராஜமௌலியின் படைப்புகள் புகழ் பெற்றிருப்பதாகவும் அவர் பாராட்டியிருக்கிறார்.
கென்யாவிலுள்ள மசாய் மரா, நைவஷா, சம்புரு, அம்போசெலி உள்ளிட்ட இடங்களில் படம்பிடிக்கப்பட்ட இந்த குழுவில் சுமார் 120 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கென்யாவில் படம்பிடிக்க உதவியதற்காக அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. அங்கு படம்பிடித்த தருணங்கள் தனது திரைவாழ்வில் மறக்க முடியாததாக அமைந்தது என்று கூறியிருக்கிறார்.
2027, மார்ச் 25 ஆம் தேதி இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் 120 நாடுகளில் வெளியாக இருக்கிறதாம்.
இவ்வளவு சிறப்புகளுக்கு மத்தியில், கென்யா படப்பிடிப்பில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா பங்கேற்ற ஆக்ஷன் ஷாட் ஒன்று சமூகவலைதளங்களில் கசிந்துள்ளது. அது பரபரப்பாகப் பகிரப்பட்டும் வருகிறது.
‘பான் வேர்ல்டு’ படமானாலும் இந்த பிரச்சனையைச் சமாளிக்க முடியாது போல..!