விமர்சனம்: மெசேஞ்சர்- சரியாக சேதி சொல்கிறதா?

Published On:

| By Minnambalam Desk

Messenger Movie Review 2025

ராஜ திருமகன்

ஐடி இளைஞன் சக்திவேல் (ஸ்ரீராம் கார்த்திக்) சின்சியராகக் காதலித்த பெண் தீப்தி குமாரி (மனிஷா ஜஸ்னானி) அவனை விட்டு விட்டு வேறொரு காதலனைத் தேடிக் கொள்ள,

ADVERTISEMENT

தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகிறான் சக்திவேலன். அப்போது அவனது போனில் உள்ள ஃபேஸ்புக் மெசெஞ்சரில் வரும் செய்தி ஒன்று ”. தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் நான் உனக்கு இருக்கிறேன் ” என்று சொல்கிறது.

விட்டத்தில் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டிருக்கும் நம்மை யார் கவனிக்க முடிகிறது என்ற குழப்பத்தில் அவன் நிற்க, ”நான் உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறேன். ஆனால் என்னை நீங்கள் பார்க்க முடியாது. நான் இறந்து சில மாதங்கள் ஆகிறது ‘ என்று சொல்வதோடு., தன் பெயர் ஊர் எல்லாம் சொல்கிறது.

ADVERTISEMENT

இது ஏதோ கம்பியூட்டார் ஹேக்கர் செய்யும் வேலை என்று எண்ணி அவன் போலீசிடம் போக, போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரனும் ( லிவிங்கஸ்டன்) அவனும், மெசேஞ்சர் செய்தி சொன்ன, அந்த ஊருக்குப் போகிறார்கள்.

அங்கே ஆனந்தி என்ற ஒரு பெண் (பாத்திமா நஹீம்) அப்படி இருந்ததும், அவள் ஒரு விபத்தில் செத்துப் போனதும் தெரிய வருகிறது.

ADVERTISEMENT

இவனுக்கு மெசேஞ்சரில் செய்தி வரும் போன், அந்தப் பெண்ணின் சமாதியில் வைத்து புதைக்கப்பட்டது என்றும் காரணம் அவளுக்கு செல்போன் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்றும் தெரிய, சுவாராஸ்யமாகவே படம் போகிறது.

Messenger Movie Review 2025

ஆனால் புதைக்க சொன்னபோது போனை எடுத்துக் கொண்டு புதைத்த வெட்டியான், தன் மகள் கயல்விழிக்கு (வைசாலி ரவிச்ச்சந்திரன்) அந்த போனைக் கொடுத்து விட்டதாக சொல்கிறான்.

கயல்விழிக்கு சக்திவேலை அடையாளம் தெரிகிறது.

செத்துப்போன பெண் ஆனந்திக்கு அவளது அப்பா செல்வராஜ் (ஜீவா ரவி) ஒரு செல்போன் வாங்கிக் கொடுக்கிறார். அவள் அதில் பேஸ்புக் கணக்கு வைத்து சாட் செய்வது, ரீல்ஸ் போடுவது என்று நாளும் பொழுதும் இருக்கிறாள். பெற்றோர் கண்டித்தும் பயனில்லை.

அப்போது சக்திவேலின் முகநூல் கணக்கைப் பார்த்து அவன் மேல் காதல் கொள்கிறாள். அதே நேரம் சக்தி வேறொரு பெண்ணைக் காதலிப்பதை அறிந்து வேதனை கொள்கிறாள்.

அடுத்த கொஞ்ச நாளில் சக்தியின் காதல் தோல்வியும் ஆனந்திக்கு முகநூல் மூலம் தெரிய வர, அந்த சந்தோஷத்தில் இருக்கும்போது அவள் ஒரு லாரி மோதி விபத்தில் செத்துப் போய் விடுகிறாள்.

அதனால்தான் ஆனந்தியின் ஆவி சக்தி வேலனிடம் மட்டும் செல்போன் மெசேஞ்சரில் பேசுகிறது என்பது தெரிய வர, அப்புறம் என்ன நடந்தது என்பதே….

பிவிகே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஜயன் தயாரிக்க, கன்னிமாடம் படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீராம் கார்த்திக், மற்றும் மனிஷா ஜஸ்னானி, பாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, ரமேஷ் இலங்காமணி இயக்கி இருக்கும் படம் இது.

கதையாக மிக இன்டரஸ்டிங்கான கதைதான். ஒரு நிலை வரை சஸ்பென்ஸ் திரில் எல்லாம் கூட இருக்கிறது. பால கணேசனின் ஒளிப்பதிவு ட்ரோன் ஷாட்களில், அவுட்டோர் காட்சிகளில் அசத்துகிறது.

கார்த்திக் ஸ்ரீராம், மனிஷா ஜஸ்னானி, பாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன், பிரியதர்ஷினி ராஜ்குமார், யமுனா, ராஜேஸ்வரி ஆகியோர் நடிப்பில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. நன்றாகவே நடித்துள்ளனர்.

பிரியாதர்ஷினியின் ஆவி காமெடி கலகல.

ஆனால் முக்கியமான கட்டத்தில், தானே கயிறு மாட்டிக் கொண்டு தூக்கில் தொங்க முயற்சி செய்ய ஆரம்பிக்கிறது திரைக்கதை. சுமார் ஒரு மணி நேரம் முக்கால் மணி நேரம் மட்டும் ஓடும் படத்துக்கே ஒழுங்காக காட்சிகள் எழுதாமல் ஓ பி அடிக்காமல் இருந்திருக்க வேண்டும்.

அபூபக்கரின் இசை வெகு சுமார்தான். எடுத்த படமே தேவையான காட்சிகள் இல்லாமல் இருக்க, அதை அப்படியே கோர்த்துக் கொடுத்து இருக்கிறார் படத் தொகுப்பாளர் பிரசாந்த்.

நாயகன் தூக்கில் தொங்க முயல்வதையும் அப்போது மெசேஞ்சரில் ஆவி வந்து பேசுவதையும் விளக்கமாக காட்டுகிறார்கள். பிறகு அவன் இன்ஸ்பெக்டரிடம் பேசும்போது வேறு, நடந்ததை எல்லாம் முழுக்க வசனத்தில் விலாவாரியாக, “நான் போனேன்.. கயிறை எடுத்தேன். நாற்காலி மேல ஏறினேன் என்கிற அளவுக்கு சொல்ல வேண்டுமா?

அதே போல செத்துப் போன ஆவியின் போட்டோவை தெளிவாக காட்டி விடுகிறார்கள். அப்புறம் இன்ஸ்பெக்டர் வாங்கிப் பார்க்கும்போது மீண்டும் என்னவோ அந்த ஆவிப் பெண்ணின் அறிமுகக் காட்சி போல, பில்டப் கொடுக்கிறார்கள். எனில் அதற்கு முன்பு போட்டோவில் முகத்தை காட்டுவதை தவிர்த்து இருக்கலாம்.

இப்படி கூறியது கூறல், காட்டியது கூறல், காட்டியது காட்டுதல் என்று ஆரம்பம் முதலே படம் இழுப்பதால் ஒருமணி நாற்பத்து நிமிட படம் மூணு மணி நேரம் பார்க்கும உணர்வை கொடுக்கிறது என்பதை கவனித்து நல்ல திரைக்கதை எழுதி இருக்க வேண்டும்.

Messenger Movie Review 2025

ஒருவேளை நிஜமாகவே பிணத்தோடு போன் புதைக்கப்பட்டு இருந்தால் அவள் ஆவியாக மெசேஜ் செய்கிறாள் என்பது அட்டகாசமான விஷயம். ஆனால் அடுத்த சீனிலேயே போன் அவள் தோழியிடம் இருக்கிறது என்று அந்த திகிலை நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே படத்தைக் கொண்டு போயிருக்கலாம்.

ஆனந்தியின் தோழி கயல் வெட்டியான் மகள் என்கிறார்கள். ஆனால் அவள் செத்துப் போன பெண்ணின் வீடு முழுக்க எப்போதுமே வளைய வருகிறாள்.

கிராமத்தில் வாழ்ந்தாலும் ஆனந்தியின் அப்பா அம்மா சாதி வேறுபாடு பார்க்காதவர்கள் என்றால் அதைச் சொல்ல வேண்டியது முக்கியம். இவற்றை எல்லாம் வைத்து நல்ல காட்சிகள் எழுதினாள் இன்னும் அரை மணி நேரம் வரை படம் நீளமாக இருக்கலாம். தவறாகப் போகாது.

தன்னைக் காதலித்து செத்தவளை எண்ணி உருகும் சக்தி, அவனை ஏமாற்றி விட்டு வேறொருவனை திருமணம் செய்து கொண்டு போன தீப்தி மறுபடியும் இவனிடம் வந்து ”என் புருஷன் சரி இல்ல. அவனுக்கு நீயே மேல்..” எனும்போது அவளிடமும் இயல்பாகப் பேசுகிறான். அதன் பிறகும் ஆவியாக இருக்கும் ஆனந்தியை காதலிக்கிறான்..

அதே நேரம் ஏமாற்றிய அந்த முன்னாள் காதலியை அழைத்துச் சென்று அம்மாவிடம் அறிமுகப்படுத்துகிறான்.

மகன் ஆனந்தி ஆவியுடன் வாழ்வதை முழுமையாக ஏற்றுக் கொண்ட சக்தியின் அம்மாவும், தன் மகனை காதலித்துக் கைவிட்டு, மகன் தற்கொலைக்கு முயலக் காரணமான அந்த முன்னாள் காதலியிடம் என்னமோ ஸ்கூல் சினேகிதி மாதிரி பேசுகிறாள்.

அந்த முன்னாள் காதலி, வீட்டில் ஆனந்தியின் ஆவி இருப்பதை உணர்ந்து மயாங்கி விழுகிறாள்.

அடுத்து ஒரு காட்சியில் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று சக்தி வீட்டுக்கு போக, ”நானும் வருகிறேன்..” என்று பயப்படாமல் போகிறாள்.

செத்துப் போன பெண்ணின் தோழியாக வரும் கயல்விழி ”இப்போ என் உடம்பில்தான் என் தோழி இருக்கா. நாம ஒண்ணு சேர்ந்தா செத்துப் போன என் ஃபிரண்டு சந்தோஷமா இருப்பா” என்கிறாள்.

” நீ இன்னொருத்தன் கூட வாழப் போற பொண்ணு அப்படிப் பேசாத” என்று சக்தி சொல்ல சொல்ல, “பரவால்ல.. என் ஃபிரண்டுக்காக ஒரு தடவை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டனா?” என்கிறாள்.

அதோடு விடாமல் “என்னை சாதாரண பொண்ணா நினைக்காத. நான் டி என் பி எஸ் சி எழுதி ஆபீசர் ஆகப் போகிறேன் உன்னால ஐடி யில் எப்போதும் ஆபீசர் ஆக முடியாது “என்கிறாள்.

இப்படி எல்லாம் அதிர்ச்சி கொடுக்காமல் இருந்திருக்கலாம்.

இப்படியாக முன்னே உள்ள காட்சிகள் என்ன என்பதையே பார்க்காமல் அடுத்தடுத்து காட்சிகள் எழுதுவது, ஒரு கேரக்டரையும் முழு வடிவம் கொடுத்து எழுதாமல் சீர் குலைப்பது என்று படம் நகர, பாலைவனத்தில் அலையும் ஆவி போல, திரைக்கதை தறி கெட்டு அலைவதை சரி செய்து இருக்கலாம்..

நல்ல திரைக்கதை அமைந்து இருந்தால் இந்தப் படம் வித்தியாசமான வெற்றிப் படம் ஆகி இருக்கும்.

எனினும் இந்த மழைக் காலத்துக்கு ஆவி பிடிக்கிற மாதிரி ஒரு ஆவி படம் பார்க்கணும் என்பவர்கள், இந்தப் படத்துக்குப் போகலாம்.

ஆனால் காஞ்சனாவை கற்பனை செய்து கொண்டு போனால் அப்புறம் காஞ்சனா பேயைப் போலவே கதறிக் கதறி அழ வேண்டி வரலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share